அமீரக செய்திகள்

அமீரகத்தில் அரைசதம் அடித்த வெப்பநிலை: எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்பினால் வெடிக்குமா..?? நிபுணர்கள் கூறுவது என்ன??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் தொடங்கியிருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் நேற்று வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகியுள்ளது. இவ்வாறு கோடை வெப்பம் உச்சத்தை நோக்கி நகரும் காலங்களில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் குடியிருப்பாளர்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமீரகத்தில் வெப்பநிலை உயர்வதால் சில தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய வதந்திகளும் சூடுபிடித்துள்ளன. அதாவது, காரின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்ப வேண்டாம், இது வெப்பத்தை உருவாக்கி டேங்க்கை வெடிக்கச் செய்யும் என்றும், ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது டேங்க்கை திறக்க வேண்டும், இதனால் சூடான காற்று ஆவியாகிவிடும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், இதுபோன்ற அச்சுறுத்தும் எச்சரிக்கைகளுக்குப் பின்னால் எந்த உண்மையும் இல்லை என்றும், இத்தகைய வதந்திகள் பெரும்பாலும் கோடைகாலங்களில் சமூக ஊடகங்களில் வலம் வரும் பழைய கதைகள் என்றும் அமீரகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு நிபுணர் ஒருவர் செய்தி ஊடகங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக Road Safety UAEயின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் என்பவர் பேசும்போது, பொதுவாக, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நிபுணர்கள் வாகனங்களை வடிவமைக்கும் போது சுற்றுப்புற வெப்பநிலை நிலைமைகள் மற்றும் செயல்திறன் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கார்கள் மற்றும் எரிபொருள் டேங்க் போன்ற அனைத்து கூறுகளையும் எந்தவிதமான காலநிலையிலும் இயங்கும் வகையில் வடிவமைத்து உருவாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவை வெப்பம் மற்றும் குளிர் உட்பட தீவிர வானிலைக்கு சோதிக்கப்படுவதாகவும்,  எரிபொருளின் எந்தவொரு விரிவாக்கத்தையும் அல்லது பெட்ரோலில் இருந்து வரும் நீராவியையும் சமாளிக்கும் வகையில் எரிபொருள் டேங்க்கின் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, எரிபொருள் டேங்க்கில் வெளிப்புற வெப்பநிலை ஆபத்தை ஏற்படுத்த 250 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது நீரின் கொதிநிலை வெப்பமான 100 டிகிரி செல்சியஸை விட வெப்பம் 2.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டேங்க்கை நிரப்பலாமா?

அமீரகத்தில் வெப்பம் மிகுந்த கோடைகாலத்தில் எரிபொருள் இன்றி பாதி வழியில் சிக்கித் தவிப்பது குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் ஆபத்தானது என்பதால், எப்போதும் டேங்கில் போதுமான எரிபொருள் இருப்பதை உறுதி செய்யுமாறு சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில், வாகன ஓட்டிகள் டேங்க்கின் எரிபொருள் முனையில் (fuel nozzle) உள்ள சென்சார் மூலம் கண்டறியப்படும் தானியங்கி கட்-ஆஃப் வரை எரிபொருளை நிரப்பலாம். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் எருபொருள் நிரப்பும் போது, டேங்கிற்குள் குறைந்த ஆவியாதல் காரணமாக பெட்ரோலின் மைலேஜை மறைமுகமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெட்ரோல் நிலையத்தில் டேங்கை நிரப்பும் போது வாகனத்தின் இன்ஜினை அணைக்க வேண்டும் என்பது அவசியமானது அல்ல என்று கூறிய எடெல்மேன், போலிச் செய்திகளைப் புறக்கணித்து, கோடைக் காலத்தில் சாலைப் பயணங்களை அனுபவிக்க பாதுகாப்பாக, ஆரோக்கியமாக மற்றும் நீரேற்றத்துடன் இருப்பதில் கவனம் செலுத்துவதே செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான விஷயம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும்அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!