Quality of Life Strategy 2033: துபாயை உலகின் சிறந்த நகரமாக மாற்றப்போகும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஷேக் ஹம்தான்..!!

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாயை உலகின் சிறந்த நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ‘Dubai Quality of Life Strategy 2033’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த மூலோபாயத் திட்டம் 200 திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை உள்ளடக்கியதுடன், குடியிருப்பாளர்கள் 20 நிமிடங்களுக்குள் அத்தியாவசிய சேவைகளை அணுகுவதை உறுதி செய்கிறது.
இது குறித்து ஷேக் ஹம்தான் X தளத்தில் வெளியிட்ட பதிவில், “பொருளாதாரத்திலும், புதுமை மற்றும் நல்வாழ்வுத் துறைகளிலும் நமது உலகளாவிய நிலையை உயர்த்துவதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துபாய் வாழ்க்கைத் தர உத்தி 2033க்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளோம். நமது சமூகத்தின் சுறுசுறுப்பும் கலாச்சார பன்முகத்தன்மையும் நமது வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கியமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துபாயை பாதசாரிகள், சுற்றுச்சூழல் மற்றும் குடும்பங்கள் வசிப்பதற்கு மிகவும் சிறந்த நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பூங்காக்களை மேம்படுத்துதல், கடற்கரைகளில் சைக்கிள் டிராக்குகளை 300 சதவீதம் விரிவுபடுத்துதல், இரவு நீச்சல் கடற்கரைகளின் நீளத்தை 60 சதவீதம் நீட்டித்தல், பெண்களுக்கென பிரத்யேகமாக புதிய கடற்கரைகளை நியமித்தல் போன்ற பல்வேறு முயற்சிகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அல் மிசார் 1, அல் கவானீஜ் 2 மற்றும் அல் பர்ஷா 2 ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மாதிரி சுற்றுப்புறங்களை வடிவமைப்பதற்கான புதிய விஷன் ஷேக் ஹம்தான் அவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பூங்காக்கள், மசூதிகள் மற்றும் கடைகள் போன்ற சமூக மையங்களுக்கு இடையேயான இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள சுற்றுப்புறங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த புதிய விஷனின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷனின் கீழ், அல் கவானீஜ் 2 மற்றும் அல் பர்ஷா 2 பகுதி குடியிருப்பாளர்களுக்கான மூலோபாயத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 115 கிமீக்கும் அதிகமான பாதசாரிகள் மற்றும் சைக்கிளிங் டிராக்குகள் அமைக்கப்படும் என்றும், 3,000 க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் நடப்படும் என்றும், மேலும் 20 க்கும் மேற்பட்ட முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போதுள்ள தெருக்களை மேம்படுத்துதல், பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கான பாதைகள், பாதசாரிகள் நடைபாதைகள், ஓய்வறைகள் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு இடங்களை உருவாக்குதல் போன்றவை மறுவடிவமைப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் குடியிருப்பாளர்கள், மென்மையான மற்றும் நிலையான போக்குவரத்து விருப்பங்களில் 20 நிமிட பயணத்தில் தங்கள் 80 சதவீத அத்தியாவசிய சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதை இந்த விஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்காக்கள் மற்றும் இயற்கைச் சூழல்
இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் துபாய் முழுவதும் புதிய வடிவமைப்புகளுடன் 30க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், எமிரேட்டில் வரவிருக்கும் அடுத்த தலைமுறை பூங்காக்களின் வடிவமைப்புகளை செவ்வாயன்று பட்டத்து இளவரசர் மதிப்பாய்வு செய்துள்ளார்.
இதுதவிர, 1,266 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எட்டு இயற்கை வனவிலங்கு காப்பகங்கள், 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடல் இருப்புகளை அமைப்பது மற்றும் நீர்வாழ் சூழல்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை கண்காணிக்க அர்ப்பணிக்கப்பட்ட தளங்கள் மற்றும் உலகின் மிகப்பெரிய கழிவு-ஆற்றல் மாற்றும் திட்டம் போன்றவற்றையும் இந்த மூலோபாயம் உள்ளடக்கியுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய முயற்சிகளில் துபாய் முழுவதும் மின்சாரம் சார்ஜ் செய்யும் நிலையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் முகமது பின் ரஷித் சோலார் பூங்காவை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வளர்ச்சி:
துபாயில் உள்ள ஜெபல் அலி பீச், ஜெபல் அலி கேரவன்ஸ் கேம்ப் பீச், ஜுமைரா, உம் சுகீம் மற்றும் அல் மம்சார் பீச் போன்ற கடற்கரைகளை மேம்படுத்துவது மற்றும் ஹத்தா, லெஹ்பாப், அல் மர்மூம், அல் லிசைலி, அல் ஃபகா’, நிஸ்வா, அல் அவிர் மற்றும் மார்கம் போன்ற பகுதிகளின் சுற்றுலா கவர்ச்சியை மேம்படுத்துவது போன்ற முயற்சிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
பசுமையை ஆதரித்தல்:
பசுமையான இடங்கள் எப்போதும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதிலும், வெப்பநிலையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது என்பது இந்த உத்தி அங்கீகரிக்கிறது.
எனவே, இந்த உத்தியின் பல்வேறு முன்முயற்சிகள் துபாயின் நிலைத்தன்மை தரநிலைகளுக்கு ஏற்ப, தெருக்களில், பொது சாலைகள், சதுரங்கள் மற்றும் பூங்காக்களில் மரங்கள் மற்றும் பூக்களை நடுவதை அதிகரிக்கவும், நிலையான நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தவும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel