அமீரக செய்திகள்

அமீரகத்தில் வங்கிக் கணக்கை மூடுவது எப்படி?? தேவையான ஆவணங்கள், செயல்முறைகள் என்னென்னெ…??

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நிரந்தரமாக வெளியே செல்கிறீர்களா? நாட்டை விட்டு வெளியேறும்போது நீங்கள் மேற்கொள்ளவேண்டிய மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று வங்கிக் கணக்கை மூடுவது. இந்த செயல்முறை நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பதால், வெளியேறும் செயல்முறையின் தொடக்கத்திலேயே வங்கிக் கணக்கை மூடுவது நல்லது.

நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர, குடியிருப்பாளர்கள் வேறொரு வங்கிக்கு மாறும்போதும் அல்லது அவர்களின் அக்கவுண்ட் நீண்ட காலமாக செயலிழந்திருந்தாலும் தங்கள் வங்கிக் கணக்குகளை மூடலாம். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சில வங்கிகளில் கணக்கை மூடும் செயல்முறை இலவசமாக நடத்தப்படுகிறது, அதேசமயம், மற்ற வங்கிகளில் கணக்கின் வகை மற்றும் சம்பந்தப்பட்ட கூடுதல் நடைமுறைகளைப் பொறுத்து 100 திர்ஹம்ஸ் முதல் 1,050 திர்ஹம்ஸ் வரை வசூலிக்கப்படலாம்.

அதாவது, கிரெடிட் கார்டுகள் அல்லது காசோலைகளில் இருக்கும் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்துவதில் தொடங்கி, கடன்கள் மற்றும் குறைந்தபட்ச இருப்பு பராமரிப்பு கட்டணம் போன்ற கணக்கு தொடர்பான கட்டணங்களும் இதில் அடங்கும்.

மேலும், எந்தவித தடையுமின்றி கணக்கை மூடுவதற்கு வெளிநாட்டவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய பல ஆவணங்கள் உள்ளன. அந்த வகையில், அமீரகத்தில் உள்ள வங்கிக் கணக்கை மூடும் போது, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்களிலிருந்து ஒப்படைக்கப்பட வேண்டிய உடமைகள் வரை முழுமையான வழிகாட்டி பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

தேவையான ஆவணங்கள்: தங்களுடைய வங்கிக் கணக்குகளை மூட விரும்பும் குடியிருப்பாளர்களிடம் வங்கிகள் பின்வரும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு கோரலாம்:

  • விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட்
  • வசிப்பிடச் சான்று (முதலில் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டதிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இடம் மாறியிருந்தால் இது வழங்கப்பட வேண்டும்)
  • பயன்படுத்தப்படாத அல்லது பயன்படுத்தப்பட்ட காசோலை புத்தகங்கள் அல்லது காசோலைகள்
  • சில வங்கிகள் தங்கள் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து அனுமதி கடிதங்களின் (clearance letter) நகல்களையும் கேட்கலாம்

செயல்முறை:

நீங்கள் ஆன்லைனில் வங்கி தொடர்பான பல சேவைகளை பெற்றாலும் ஒரு அக்கவுண்டை மூடுவதற்கு வங்கியின் குறிப்பிட்ட கிளைக்கு நேரில் செல்ல வேண்டியது அவசியமாகிறது, அதன் பிறகு குடியிருப்பாளர்கள் பின்வரும் செயல்முறைகளை தொடரலாம்:

  1. குடியிருப்பாளர்கள் வங்கிக்குச் சென்றதும் கணக்கு மூடல் படிவத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும்.
  2. அனைத்து நிதிகளையும் பழைய கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்ற வேண்டும்.
  3. உங்கள் காசோலை புத்தகங்கள் மற்றும் காசோலைகளை ஒப்படைக்கவும்.
  4. சில குடியிருப்பாளர்கள் அனுமதி கடிதங்கள் (clearance letter) அல்லது முதலாளியின் இறுதி தீர்வு கடிதத்தின் (final settlement letter) நகலை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படலாம்.
  5. படிவத்தைச் சமர்ப்பிக்கவும் (உள்ளடக்கங்களும் தேவைகளும் குடியிருப்பாளரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடலாம்)

வங்கிக் கணக்கு மூடப்படுவதற்கு வழக்கமாக மூன்று முதல் ஐந்து வேலை நாட்கள் வரை ஆகும். சில சந்தர்ப்பங்களில், இது ஒரு வாரம் வரை ஆகலாம். உங்கள் கணக்கு மூடப்பட்டவுடன், இது தொடர்பான கடிதத்தைப் பெறுவீர்கள்.

நினைவில் கொள்ள வேண்டியவை

  • ஐக்கிய அரபு அமீரகத்தில், வங்கி கணக்கு ஆறு மாதங்கள் செயலிழந்திருந்தால், அந்த கணக்கை வங்கிகள் தானாகவே மூடும் அல்லது முடக்கும். எனவே, பணப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டை விட்டு வெளியேறும் முன் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதை மூடுவது முக்கியம்.
  • செயலற்ற வங்கிக் கணக்கு ஒரு குறிப்பிட்ட காலச் செயலற்ற நிலைக்குப் பிறகு கூடுதல் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும்.
  • வங்கிக் கணக்கை மூடிய பிறகும், பாதுகாப்புக்காக டெபிட் கார்டுகளை வைத்திருப்பது நல்லது.
  • மூடுவதற்கு முன் அனைத்து நிலுவைத் தொகைகளும் செலுத்தப்பட்டுவிட்டன என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!