அமீரக செய்திகள்

அமீரக தொழிலாளர் சட்டத்தில் மூன்று முக்கிய திருத்தங்கள்.. ஆகஸ்ட் 31 முதல் நாடு முழுவதும் அமல்..!!

ஐக்கிய அரபு அமீரக அரசு தனது தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. தொழிலாளர் விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டம், ஜூலை 29 அன்று வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண் 9 இன் ஒரு பகுதியாகும். மேலும் ஆகஸ்ட் 31, 2024 முதல் நாடு முழுவதும் இந்த சட்டம் நடைமுறைக்கும் வரவுள்ளது.

அவ்வாறு அமீரகத்தில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் இந்த புதிய திருத்தங்களில் முக்கியமான மூன்று சட்ட திருத்தங்களும் அடங்கும். அது பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே சற்று சுருக்கமாக பார்க்கலாம்.

1. தொழிலாளர் உரிமைகோரல்களுக்கான வரம்புகளின் சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:

அமீரக தொழிலாளர் சட்டத்தின் கீழ் தொழிலாளர் உரிமைகளை கோருவதற்கான வரம்புகளின் சட்டம், உரிமை பெற்ற நாளிலிருந்து அதாவது ஒரு வருடத்தில் இருந்து வேலை உறவு நிறுத்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த நீட்டிப்பை முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவரும் பயன்படுத்தலாம்.

2. 50,000 திர்ஹம்ஸிற்கு கீழ் உள்ள வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை:

தற்போதைய திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் படி 50,000 திர்ஹம்ஸிற்கு கீழான வழக்குகளுக்கு மேல்முறையீடு தேவையில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இனி
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) தொழிலாளர் வழக்குகளை 50,000 திர்ஹம் வரையிலான கோரிக்கைகளை கையாளும். மேலும் ஜனவரி 2024 முதல் MOHRE இந்த வழக்குகளை கையாண்டும் வருகிறது.

அதாவது திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 54 (2) ஆனது, MOHRE க்கு 50,000 திர்ஹம்களுக்கு மிகாமல் உள்ள அனைத்து உரிமைகோரல்களையும் கேட்க, தீர்மானிக்க மற்றும் முடிவுகளை வழங்குவதற்கான அதிகாரங்கள் தொடர்ந்து உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன்னதாக MOHRE வின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

ஆனால், ஆகஸ்ட் 31 முதல் இந்த செயல்முறை மாறும். எவ்வாறெனில், அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து சவால் செய்யும் வழக்குகள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதிலாக முதல் நிகழ்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன், MOHRE இன் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் முதல் வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

முதல் நிகழ்வு நீதிமன்றம் மூன்று வேலை நாட்களுக்குள் ஒரு விசாரணையை அமைக்கும், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும். இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அதனை எதிர்த்து மேல்முறையீடுகள் எதுவும் அனுமதிக்கப்படாது. இந்த நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பே இறுதியானதாகும்.

3. தொழிலாளர் மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பு:

புதிய சட்டம் தொழிலாளர் சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய சட்டத்தின் கீழ், அனுமதியின்றி தொழிலாளர்களை பணியமர்த்துதல், அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக வேலை அனுமதிகளைப் பயன்படுத்துதல் அல்லது தொழிலாளர் உரிமைகளைத் தீர்க்காமல் நிறுவனங்களை மூடுதல் போன்ற குற்றங்களுக்கு 50,000 திர்ஹம் முதல் 200,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட சட்டம் இப்போது இந்த மீறல்களுக்கு 100,000 திர்ஹம் முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!