துபாய் ஏர்போர்ட்டில் காரை பார்க் செய்வது இனி ரொம்ப ஈசி.. புதிய முறை விரைவில் அறிமுகம்..!!
உலகின் புகழ்பெற்ற விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையமானது தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகளை எதிர்கொண்டு வருகின்றது. இந்த விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளை வரவேற்பதற்கும் விமான நிலையத்தில் இருந்து புறப்படக்கூடிய பயணிகளை அனுப்பி வைப்பதற்கும் நண்பர்கள், உறவினர்கள் என பலர் தங்கள் கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கமாகும்.
இவ்வாறு வாகனங்களை நிறுத்தி சென்று விட்டு மீண்டும் திரும்பும் போது எந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தினோம் என்பது சில நேரங்களில் குழப்பமாகிவிடும். துபாய் விமான நிலையமானது பெரிய அளவிலான பார்க்கிங்கை கொண்டிருப்பதால் வாகனங்களை தேடுவது சற்று சிரமமாக இருக்கலாம்.
ஆனால் இனி விரைவில் அப்படி இருக்காது என கூறப்பட்டுள்ளது. அதாவது துபாய் ஏர்போர்ட்ஸ் நேற்று (புதன்கிழமை) துபாய் இன்டர்நேஷனலில் புதிய மேம்பாடுகளை கூடிய விரைவில் வெளியிடும் என்று தெரிவித்திருக்கின்றது. இதில் எளிதாக வழியை கண்டுபிடிப்பதற்கு வண்ண-குறியிடப்பட்ட கார் பார்க்கிங்குகள் (color coded car parking) அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து துபாய் ஏர்போர்ட்ஸ் “துபாய் விமான நிலையங்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், செயல்பாட்டு சிறப்பு மற்றும் தடையற்ற பயண அனுபவங்களை மையமாகக் கொண்டு, வரும் மாதங்களில் புதிய மேம்பாடுகள் வெளியிடப்படும். அதில் எளிதான வழியை கண்டுபிடித்தலுக்கான வண்ண-குறியிடப்பட்ட கார் நிறுத்துமிடங்களும் அடங்கும்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மூன்று டெர்மினல்களுக்கு ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கிறார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் விமான நிலையத்தில் பார்க்கவும் பெறவும் செல்கிறார்கள். இந்நிலையில் வரவிருக்கும் இந்த புதிய வண்ண-குறியிடப்பட்ட கார் நிறுத்தங்கள் DXB இன் வாகன நிறுத்துமிடங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு வழிசெலுத்தலை எளிதாக்கும் என கூறப்படுகின்றது.
தற்பொழுது துபாயை சேர்ந்த flydubai விமான நிறுவனம் அதன் பயணிகளை துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இல் தங்கள் பார்க்கிங் இடத்தை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் விமான நிலையத்திற்கு வரும் போது பார்க்கிங் இடத்தைப் பெறுவதில் உள்ள சிக்கலை நீக்குகிறது. துபாய் சர்வதேச விமான நிலையம், டெர்மினல் 2 இல், நீண்ட கால மற்றும் குறுகிய கால காலங்களுக்கு, ஃப்ளைதுபாய் மூலம் ஒரு நாளைக்கு 50 திர்ஹம் வரை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
இதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த கார் பார்க்கிங்கிற்குள் நுழைய, உங்கள் முன்பதிவு உறுதிப்படுத்தலில் கொடுக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் போதும் (வருகை A1 அல்லது புறப்பாடு A2) என்று விமான நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
துபாய் சர்வதேச (DXB) விமான நிலையமானது இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 44.9 மில்லியன் பயணிகளைப் பெற்றுள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டின் மொத்த விமான இயக்கங்களின் எண்ணிக்கை 216,000 ஐ எட்டியது என்றும், இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் 7.2 சதவீதம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 7.9 மில்லியன் பயணிகளைக் கையாண்ட ஜனவரி மாதம் மிகவும் பரபரப்பான மாதம் ஆகும்.
அதே போல் 2024 இன் முதல் பாதியில், 98 சதவீத பயணிகள் புறப்படும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் 10 நிமிடங்களுக்கும் குறைவான காத்திருப்பு நேரங்களை அனுபவித்தனர் என்றும், அதே 98 சதவீதம் பேர் வருகையில் உள்ள பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே காத்திருந்தனர் என கூறப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் நடைமுறைகளை முடிப்பதற்கான நேரம் குறைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel