அமீரகத்தில் பெய்து வரும் கோடை மழை.. எப்போது வரை நீடிக்கும்..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் மேலும் மழை பெய்யும் என்று அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
NCM வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வியாழக்கிழமை வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், சில பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இம்மாத இறுதி வரை ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாட்களில் காற்றின் வேகம் லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்றும், சில நேரங்களில் புத்துணர்ச்சியுடன் காற்று வீசும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது. தென்கிழக்கில் இருந்து வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்று வீசும் என்பதால், வெப்பச்சலன மேகங்கள் தூசி மற்றும் மணலை வீசும் எனவும், இது கிடைமட்ட பார்வையை குறைக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
கடல் சீற்றத்தை பொருத்தவரை அரேபிய வளைகுடாவில் கடல் அலைகள் லேசானது முதல் மிதமானதாகவும், ஓமன் கடலில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் சில சமயங்களில் கொந்தளிப்பாகவும் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நலையில் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தேசிய வானிலை மையம் கூறியுள்ளது.
நாட்டின் வெப்பநிலையை பொருத்தவரை இன்று ஓரளவு மேகமூட்டத்துடனும், சில சமயங்களில் தூசி நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை 25°C ஆகவும், உள் பகுதிகளில் 28°C வரையிலும் வெப்பநிலை இன்று குறையும் என்றும் NCM அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel