துபாய்: குறைக்கப்படும் வேலை நேரம், வெள்ளிக்கிழமை வேலை இல்லை.. குறிப்பிட்ட அரசு நிறுவனங்களுக்கான புதிய முயற்சி..!!
அமீரகத்தில் நிலவும் கோடைகாலத்தை முன்னிட்டு ஊழியர்களின் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை துபாய் அரசு தொடங்கவிருக்கின்றது. அதாவது துபாயில் உள்ள அதிகாரிகள் கோடை காலத்தில் அரசு நிறுவனங்களின் வேலை நேரத்தைக் குறைக்க ஒரு முன்முயற்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
துபாய் அரசாங்க மனிதவளத் துறை (DGHR) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் படி, வெள்ளிக்கிழமைகளில் வேலை நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் வேலை நேரமானது ஏழாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துபாயில் உள்ள 15 அரசு நிறுவனங்களில் ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30 வரை ‘எங்கள் நெகிழ்வான கோடைக்காலம்’ எனும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் வார விடுமுறை நாட்களை வெள்ளிக்கிழமை அரை நாள், சனி மற்றும் ஞாயிறு என இரண்டரை நாட்கள் அனுபவிக்கிறார்கள். தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சியின் மூலம், குறிப்பிட்ட அரசு துறைகளில் உள்ள ஊழியர்கள் அடுத்து வரவிருக்கும் ஏழு வாரங்களுக்கு நீண்ட வார விடுமுறை நாட்களை அனுபவிப்பார்கள் என கூறப்படுகின்றது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும் எந்தெந்த நிறுவனங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்பதை DGHR குறிப்பிடவில்லை. ஆனால் இது பணியிட நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது கோடை காலத்தில் பணியிடத்தில் பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வேலை நேரத்தைக் குறைக்க அரசு நிறுவனங்களின் விருப்பத்தை மதிப்பிடுவதற்காக இத்துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது என்றும் அதில் பெரும் ஆதரவைப் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த முயற்சி அரசு துறைகளுக்குள் எரிசக்தி பயன்பாட்டை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DGHR, ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் மீதான முயற்சியின் தாக்கத்தை அளவிடுகையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆய்வுகள் குறைவான வேலை நேரங்கள் எவ்வாறு உற்பத்தியை அதிகரிக்கின்றன என்பதை நிரூபித்துள்ளது.
அதில் மூன்று நாள் வார விடுமுறை நாட்களைக் கொண்ட ஷார்ஜா அரசு நிறுவனங்களில், அதன் ஊழியர்களால் 88 சதவிகிதம் உற்பத்தித் திறனில் அதிகரிப்பு கண்டதாகவும் வேலை திருப்தியில் 90 சதவிகிதம் உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும், சேவை திருப்தி விகிதம் 94 சதவீதமாக உயர்ந்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இது குறித்து DGHR இன் டைரக்டர் ஜெனரல் அப்துல்லா அலி பின் சயீத் அல் ஃபலாசி கூறுகையில் “துபாயின் போட்டித்திறனை உயர்த்துவதற்கு ஸ்மார்ட் தீர்வுகள் மற்றும் புதுமையான கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான எங்கள் பார்வையை இந்த வெளியீடு மேலும் அதிகரிக்கும். இந்த முயற்சியானது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், அரசாங்க வளங்களின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, துபாயை சிறந்த வாழ்க்கை முறைக்கு ஏற்ற நகரமாக நிலைநிறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel