அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்கும் பொதுமன்னிப்பு.. வெளிநாட்டினரின் சந்தேகங்களால் மூழ்கிய டைப்பிங் சென்டர்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகம் தனது இரண்டு மாத விசா பொது மன்னிப்பு திட்டத்தை செப்டம்பர் 1 முதல் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமீரகத்தில் இருக்கக்கூடிய டைப்பிங் சென்டர்கள் தங்கள் விசா நிலையை முறைப்படுத்த விரும்பும் வெளிநாட்டினரின் அழைப்புகள், சந்தேகங்கள் மற்றும் விசாரணைகளால் மூழ்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த சலுகைக் காலத்தில், சட்டவிரோதமாக வசிப்பவர்கள் தங்கள் அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்யக்கூடிய வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், அதனால் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்லலாம் அல்லது தங்களின் விசா நிலையை முறைப்படுத்தி அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “ரெசிடென்ஸி விசா வைத்திருந்து ஓவர்ஸ்டேயில் தங்கியிருப்பவர்களிடமிருந்து நாங்கள் நிறைய விசாரணைகளைப் பெறுகிறோம். அவர்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. ஆவணங்களை எவ்வாறு செயலாக்குவது மற்றும் அவற்றின் நிலையை முறைப்படுத்த விண்ணப்பிப்பது எப்படி என்று எங்களிடம் கேட்கிறார்கள்” என்று அரேபியன் பிசினஸ் சென்டரின் செயல்பாட்டு மேலாளர் ஃபிரோஸ் கான் கூறியுள்ளார்.
இந்தக் கேள்விகள் அனைத்தையும் சமாளித்தாலும், இமிகிரேஷன் அதிகாரிகளிடமிருந்து விவரங்களுக்காகக் காத்திருப்பதால், நடைமுறையைப் பற்றி அவர்களால் அதிகம் சொல்ல முடியவில்லை என்று கான் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி தெரிவிக்கையில் “இப்போதிலிருந்து ஓரிரு நாட்களில், அதிகாரிகளிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெறுவோம், மேலும் எங்கள் ஆன்லைன் போர்ட்டல் புதுப்பிக்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.
நடைமுறைகள் மற்றும் தேவைகள்
பொது மன்னிப்பு செயல்முறை குறித்து கூறப்பட்டுள்ள சில விவரங்களில் விசா முடிந்தும் கூடுதல் காலம் தங்கியிருப்பவர் தங்களுடைய ஆவணங்களை டைப்பிங் சென்டர் அல்லது டாகுமென்ட் கிளியரிங் சர்வீசஸ் போன்ற சேவை மையங்களில் சமர்ப்பிக்கலாம். அவர்கள் அவற்றை அமர் மையத்திற்கு மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து விண்ணப்பம் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், அவுட்பாஸ் வழங்கப்படும் மற்றும் சட்டவிரோதமாக வசிப்பவர் நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓவர்ஸ்டேயில் தங்கியிருப்பவர் ஒரு நிறுவனத்திடமிருந்து ஆஃபர் லெட்டரை பெற்றிருந்தால், தொடர்ந்து இங்கு தங்குவதற்கு அதற்குரிய விசா நடைமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
இருப்பினும், பல டைப்பிங் சென்டர்கள் இன்னும் அதிகாரிகளிடமிருந்து முழு அறிவுறுத்தல்களைப் பெறவில்லை. டைப்பிங் சென்டர்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் “ஐக்கிய அரபு அமீரக பொது மன்னிப்பு திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்ததும், அவர்களில் பலர் விரிவான நடைமுறைகளுக்காக எங்களை அணுகினர். எவ்வாறாயினும், விண்ணப்பத்தின் தேதிகள் மற்றும் அது எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பது மட்டுமே எங்களுக்கு இதுவரை கிடைத்த தகவல்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது, தெளிவுக்காக காத்திருக்கும் போது, பொதுமன்னிப்பு திட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் “நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைவரையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், அவர்களின் ரெசிடென்ஸ் நிலையை சட்டப்பூர்வமாக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel