ஷார்ஜாவில் நடந்த சோகம்.. பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் பலி.. மூவர் காயம்..!!

ஷார்ஜாவில் கட்டுமான பணியில் இருந்த பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷார்ஜாவின் கல்பா நகரில் இந்த பள்ளி கட்டப்பட்டு வருவதாகவும் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் இறந்தது மட்டுமல்லாமல் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா காவல்துறை இது பற்றி தெரிவிக்கையில் நேற்று (செப்டம்பர் 8) பிற்பகலில் விபத்து பற்றிய அறிக்கை கிடைத்தவுடன் பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டன என கூறியுள்ளது. கிழக்குப் பிராந்திய காவல் துறையின் இயக்குநர் கர்னல் டாக்டர் அலி அல்-கமூதி கூறுகையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை காயங்கள் இருந்ததாகவும் காயங்களுக்கு வீரர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அரபு மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது.
ஷார்ஜா சிவில் பாதுகாப்பு ஆணையம், கல்பா விரிவான காவல் நிலையம், குற்றக் காட்சிக் குழு, தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் கல்பா நகர முனிசிபாலிட்டி உட்பட அனைத்து சிறப்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்குச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சேதத்தை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழுக்கள் விபத்து நடந்த தளத்தை சுத்தம் செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான முதலுதவி அளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஷார்ஜா காவல்துறை, கூரை இடிந்து விழுந்ததற்கான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel