அமீரக செய்திகள்

துபாயில் பைக்கரை வேண்டுமென்றே இடித்து கீழே தள்ளிய டெலிவரி ரைடர்!! அதிரடியாக கைது செய்த துபாய் போலீஸ்…

துபாயில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கரின் வாகனத்தின் மீது வேண்டுமென்றே தன்னுடைய பைக்கால் இடித்துத் தள்ளி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக டெலிவரி ரைடரை துபாய் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட டெலிவரி ரைடர் சாலை விதிகளை மீறியதுடன், சக சாலைப் பயனரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக இந்த வழக்கை பொது வழக்கறிஞருக்கு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிவரி ரைடர் வேண்டுமென்றே தனது பைக்கை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த பைக்கர் மீது மோத விட்டு, அவரை கீழே விழ வைத்து விட்டு பின்னர் திரும்பிப்பார்த்து நிற்காமல் வேகமாகச் செல்வதை அவர்களுக்குப் பின்னால் காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும், இந்த வீடியோ கிளிப்பை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ படுவேகத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த டெலிவரி ரைடரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்தில் கீழே விழுந்த நபர் லேசான காயங்களுடன் உயிர்தப்பியிருக்கும் நிலையில்,  சாலை உரிமை தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக டெலிவரி ரைடர் அவ்வாறு வன்முறையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆகவே, இத்தகைய சாலை உரிமை தொடர்பான தகராறுகளைத் தீர்க்க எப்போதும் திறமையான அதிகாரிகளை நம்பியிருப்பதன் முக்கியத்துவத்தை காவல்துறை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், இதுபோன்ற சாலை வன்முறை சம்பவங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

முக்கியமாக, அமீரகத்தில் சாலையில் முரட்டுத்தனமான சைகைகளைக் காட்டினால் கூட அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டில், விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஒரு ஓட்டுநரிடம் மோசமான சைகையைக் காட்டிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதேபோல், குற்றவியல் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டில், ஜெபல் அலிக்கு அருகிலுள்ள அல் கைல் சாலையில் சாலை தகராறின் போது மற்றொரு ஓட்டுநரின் முகத்தில் குத்தியதற்காக 34 வயதான ஐரோப்பியருக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து உத்தரவிட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!