அமீரக செய்திகள்

UAE: தொழிலாளர் தங்கும் விடுதிகளில் ஆய்வு..!! போதிய வசதிகள் இல்லாத 352 விதிமீறல்கள் பதிவு…!!

வெளி நாடுகளில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலாளர் தங்கும் விடுதிகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அமீரகத்தில் உள்ள தொழிலாளர் தங்கும் விடுதிகளில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வசிப்பதாகவும், சுமார் 1,800 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைச்சகத்தின் எலெக்ட்ரானிக் தொழிலாளர் விடுதி அமைப்பில் (Labour Accommodation System) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளார்கள் வசிக்கும் விடுதிகளில் அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் தொழிலாளர்களுக்கு விடுதிகளில் போதுமான காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் இல்லாதது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களுக்கு பாதுகாப்பான நிலைமைகளை வழங்காதது, சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியது மற்றும் வீட்டு வசதியில் பொதுவான தூய்மை பிரச்சினைகள் உட்பட சுமார் 352 மீறல்களை கண்டறிந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 20ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறிய சில நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மற்றவர்களுக்கு அபராதமும், சிலருக்கு தங்குமிடங்களை சரிசெய்ய ஒரு மாதம் வரை அவகாசமும் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MoHREஆல் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுப் பிரச்சாரத்தில் விடுதிகள் தொழிலாளர்களின் உடல்நலம், ஆறுதல் மற்றும் தூய்மைத் தரங்களுக்கு இணங்குவதை ஆய்வாளர்கள் உறுதி செய்வதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் கட்டிடம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கட்டிடங்கள் மற்றும் வசதிகள் சுற்றுச்சூழலுக்கும் அல்லது பொது சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்காத பொருட்களால் செய்யப்பட்டவை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து MoHRE இன் ஆய்வு விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளர் மொஹ்சின் அலி அல் நாசி பேசிய போது, அமைச்சகம் வசதி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்யும் தொழிலாளர் விடுதிகளை வழங்க உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

MoHREயின் படி, அமீரகத்தில் உள்ள தொழிலாளர் விடுதிகள் அனைத்தும் சுத்தமான, குளிர்ந்த நீரை தடையின்றி வழங்குவதற்கும், தூய்மையான படுக்கையறை மற்றும் கழிவறை வசதிகளை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு தனிநபருக்கு குறைந்தது மூன்று சதுர மீட்டர் இடம் ஒதுக்குவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!