UAE: தாமதமாக வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்.. சட்டம் சொல்வது என்ன??
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தூக்கமின்மை, நீண்ட பயணங்கள் அல்லது குடும்பக் கடமைகள் போன்ற பல்வேறு காரணங்களால் வேலைக்கு சில நிமிடங்கள் தாமதமாக செல்வது சிறிய விஷயமாகத் தெரியலாம்.
ஆனால், நீங்கள் தொடர்ந்து வேலைக்கு தாமதமாக சென்றால், அதுவே எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் அல்லது சம்பளக் குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?? ஆகவே, பணியிடங்களுக்கு செல்கையில் நேரம் தவறாமல் இருப்பது அவசியமாகும். இருப்பினும், அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக உங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்.
UAE தொழிலாளர் சட்டம் சம்பளப் பிடித்தம் பற்றி என்ன கூறுகிறது?
UAE தொழிலாளர் சட்டம், முதலாளி கொள்கைகளுக்கு இணங்க நிறுவனத்தில் இது செயல்படுத்தாதவரை, தொழிலாளர்களின் தாமதத்திற்கு தன்னிச்சையான சம்பளக் குறைப்புகளை விதிக்க முதலாளிகளை அனுமதிக்காது என்று அமீரகத்தில் உள்ள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பளப் பிடித்தம் எப்போது அனுமதிக்கப்படுகிறது?
UAE தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 25 ன் படி, பின்வரும் சூழ்நிலைகளில் சம்பளக் குறைப்புகள் அனுமதிக்கப்படுவதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்:
- பணியாளர்கள் தங்கள் முதலாளிகளிடம் கடன் வாங்கியிருக்கும் போது.
- ஊழியர்களுக்குத் தவறுதலாகச் செலுத்தப்பட்ட நிதியைத் திரும்பப் பெறும் போது
- ஊழியர்கள் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால்.
இது தவிர, சட்டத்தின் 25 மற்றும் 39 வது பிரிவுகள் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்புகள் உட்பட ஒழுங்குமுறை அபராதங்களையும் விதிக்க முதலாளிகளை அனுமதிக்கின்றன. ஆனால் இந்த அபராதங்கள் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் ஒழுங்குமுறை நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளக் குறைப்புக்களில் கட்டுப்பாடுகள்:
சட்ட வல்லுனர்களின் கூற்றுப்படி, அமீரகத்தில் ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்வதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த வகையில், சம்பளக் குறைப்பானது ஊழியர்களின் மாத ஊதியத்தில் ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
முக்கியமாக, முறையான ஒழுங்குமுறை நடைமுறையைப் பின்பற்ற வேண்டும், இதில் மீறல் குறித்து பணியாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பது மற்றும் ஊழியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதும் அடங்கும்.
தாமதம் மற்றும் நேரத்தை கடைபிடித்தல் மீது மனித வளங்கள் (HR) மற்றும் நிறுவனத்தின் கொள்கைகள்
அமீரக தொழிலாளர் சட்டத்தில் தாமதத்தைப் பற்றி வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், இந்தக் கொள்கைகள் சட்டத்துடன் ஒத்துப்போகும் வரை மற்றும் MOHRE ஆல் அங்கீகரிக்கப்படும் வரை, சம்பளக் குறைப்பு உட்பட ஒழுங்கு நடவடிக்கைகளை விதிக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது என்பதையும் சட்ட வல்லுனர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நிறுவன விதிகள் மற்றும் நடைமுறைகளை அமைப்பதன் மூலம் HR கையேடுகள் அதிகாரப்பூர்வ வழிகாட்டியாக செயல்படுகின்றன. ஒரு பணியாளர் மனிதவள கையேட்டில் உள்ள விதிகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களில், கையேடு ஒப்பந்தம் செய்யப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நிறுவனத்தின் ஒழுக்கக் கொள்கையின்படி ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதலாளிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று சட்ட நிறுவனத்தின் தலைவர்கள் கூறுகின்றனர்.
எனவேதான், சாத்தியமான தடைகளைத் தவிர்ப்பதற்கு ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தின் விதிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. இந்த அபராதங்கள் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் முதல் 14 நாட்கள் வரை இடைநீக்கம், இரண்டு ஆண்டுகளுக்கு பதவி உயர்வு மறுப்பு அல்லது பணிநீக்கம் வரை இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அபராதம் விதிக்கும்போது, முதலாளிகள் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:
- பணியாளரின் மீறல் நிறுவனத்தின் மீது என்ன நிதி தாக்கத்தை ஏற்படுத்தியது?
- ஊழியர் கடந்த காலத்தில் விதிமீறலைச் செய்தாரா?
- கருத்தில் கொள்ள வேண்டிய தார்மீகக் கருத்துகள் ஏதேனும் உள்ளதா?
- அதேசமயம், என்ன அபராதம் விதிக்கப்படுகிறது, அது ஏன் விதிக்கப்படுகிறது, மேலும் மீறலை மீண்டும் செய்தால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய அபராதங்கள் என்ன என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக பணியாளருக்கு முதலாளி தெரிவிக்க வேண்டும்.
UAE தொழிலாளர் சட்டத்தை மீறி சம்பளப் பிடித்தம் செய்தால் என்ன செய்வது?
ஊழியர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அல்லது சம்பளப் பிடித்தம் போன்ற எந்தவொரு தண்டனையும் சட்டவிரோதமானது என்று ஊழியர்கள் நம்பும்பட்சத்தில் அதற்கு எதிராக புகாரளிக்க ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர்.
எனவே, அவர்கள் தங்கள் மனக் குறையை தாக்கல் செய்வதன் மூலம் அதை அவர்களின் முதலாளிகள் விசாரித்து அதன் முடிவை ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். சட்டத்தின் 24 வது பிரிவில், 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையை வழங்க வேண்டும், அதன் மூலம் அவர்கள் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை அல்லது ஊதியக் குறைப்புக்கும் எதிராக போராடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியும் இந்த விஷயத்தைத் தீர்க்க முடியவில்லை என்றால், MOHRE போன்ற பொருத்தமான சட்ட வழிகள் மூலம் ஊழியர் புகாரை அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel