Dubai Jobs: அடுத்த 5 ஆண்டுகளில் 185,000 வேலைகள்..!! இனி இந்த துறையில்தான் அதிக வேலைவாய்ப்புகள்..!!
உலகளவில் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாக துபாய் விமான நிலையம் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் துபாயின் விமான போக்குவரத்து துறையானது தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு இன்னும் 5 ஆண்டுகளில், துபாயின் விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் 185,000 வேலைகள் சேர்க்கப்படும் என்று எமிரேட்ஸ் குழுமம் மற்றும் துபாய் ஏர்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் & குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி மற்றும் துபாய் ஏர்போர்ட்ஸின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் பேசிய போது, “எங்கள் வளர்ச்சித் திட்டங்கள் விமானப் போக்குவரத்துத் துறையில் இன்னும் கூடுதலான திறமையான வேலைகளை உருவாக்குவதோடு, பயண அனுபவங்களை மேம்படுத்தவும், செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதற்கான எதிர்கால தீர்வுகளை உருவாக்க முன்னணி தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, புதுமைகளை உருவாக்க உதவும்” என்று கூறியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய ஷேக் அஹமது, துபாயின் விமானப் போக்குவரத்துத் துறையானது இன்றுவரை நகரத்தின் பொருளாதார வளர்ச்சி உத்தியின் முக்கிய தூணாக இருந்து வருவதாகவும், இது D33 பொருளாதார நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேலும் உலகையே புரட்டிப்போட்ட உச்ச கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு, 2021 இன் பிற்பகுதியிலிருந்து துபாய் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் விமானப் போக்குவரத்துத் துறை தொடங்கிய புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இதுவரை எந்த தாமதமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த காலகட்டத்தில், புதிய விமானிகள், கேபின் குழுவினர் மற்றும் தரைப் பணியாளர்களின் புதிய ஆட்சேர்ப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியதாகக் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், துபாய் விமானப் போக்குவரத்துத் துறை 630,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2030 ஆம் ஆண்டளவில் 185,000 கூடுதல் வேலைகளுடன், துபாய் விமானப் போக்குவரத்துத் துறையில் 816,000 பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2023ல் ஐந்தில் ஒரு வேலையாக இருக்கும் துபாயின் விமானப் போக்குவரத்துறையில் 2030க்குள் நான்கில் ஒரு வேலை விமானப் போக்குவரத்துடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
துபாயின் விமான நிலையங்கள் 88 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்கின்றன மற்றும் 2023 இல் 17 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன எமிரேட்ஸ்-துபாய் ஏர்போர்ட்ஸ் இணைந்து நடத்திய ஆய்வானது ‘Oxford Economics’ என்ற உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனத்தால் தொகுக்கப்பட்டது. இது விமானப் போக்குவரத்துத் துறையின் நேரடி பொருளாதார நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்கிறது.
132,000 வேலைகளை உருவாக்க DWC டெர்மினல் கட்டுமானம்
அதிகரித்துவரும் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் (DWC) 128 பில்லியன் திர்ஹம் மதிப்பில் புதிய பயணிகள் முனையத்தை உருவாக்க துபாய் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டுமானத் திட்டம் 2030 ஆம் ஆண்டில், துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.1 பில்லியன் திர்ஹம்ஸ் பங்களிக்கும் மற்றும் 132,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எமிரேட்ஸ் பங்களிப்பு
துபாயின் பொருளாதாரத்தில் எமிரேட்ஸ் குழுமத்தின் பங்களிப்பு 2030 ஆம் ஆண்டில் துபாயின் திட்டமிடப்பட்ட GDPயில் 24% ஐப் பிரதிநிதித்துவப்படுத்தும் 144 பில்லியன்திர்ஹம்சை எட்டும் என்று Oxford Economics கணித்துள்ளது. மேலும், துபாயில் எமிரேட்ஸ் உருவாக்கும் வேலைகளின் எண்ணிக்கை 554,000 ஆக உயரும் அல்லது துபாய் முழுவதும் உள்ள வேலைகளில் ஆறில் ஒன்றாக இருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel