துபாயில் களைகட்ட போகும் தீபாவளி கொண்டாட்டம்..!! சிறப்பு வான வேடிக்கை, பாரம்பரிய சந்தை மற்றும் பல சிறப்பு நிகழ்வுகள் அறிவிப்பு…!!

துபாயில் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கென தீபாவளி வான வேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய சந்தை என பொழுதுபோக்குகளின் அற்புதமான வரிசை காத்திருக்கிறது.
அதாவது எதிர்வரும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 7, 2024 வரை, தீபத் திருவிழா கொண்டாட்டங்களை நடத்தவிருக்கின்றது துபாய். எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த தீபாவளி சீசனில் வானவேடிக்கை காட்சிகள், பல்வேறு கலாச்சார அனுபவங்கள் மற்றும் பல சிறப்பு பொழுதுபோக்கு நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.
குறிப்பாக, துபாயில் உள்ள அல் சீஃப் மற்றும் குளோபல் வில்லேஜ் போன்ற பிரபலமான இடங்களில் நடத்தப்படும் சிறப்பு வானவேடிக்கை காட்சிகளும் இதில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. அல் சீஃப் பூங்காவில் வானவேடிக்கைகளின் முதல் காட்சிகள் அக்டோபர் 25 மற்றும் 26 அன்று இரவு 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மற்றொரு சுற்று நவம்பர் 1 மற்றும் 2 இரவு 9 மணிக்கு குளோபல் வில்லேஜில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் குளோபல் வில்லேஜில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ஒரு வார கால தீபாவளி கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம். இந்த விழாக்களில் வண்ணமயமான ரங்கோலி கலை, கலகலப்பான நிகழ்ச்சிகள் மற்றும் மிகவும் பிரமிக்க வைக்கும் பட்டாசுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் இந்தியா பெவிலியனில் உள்ள ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்து மகிழலாம் மற்றும் இந்தியன் சாட் பஜாரில் (Indian Chaat Bazaar) இந்தியாவின் பாரம்பரிய தெரு உணவுகள் முதல் பல்வேறு சிறந்த உணவுகள் வரை அனுபவிக்கலாம்.
அத்துடன் அல் சீஃப் அதன் நூர் – ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ் அக்டோபர் 25 முதல் 27 வரை டீம்வொர்க் ஆர்ட்ஸால் நடத்தப்படும் இலவச கலாச்சார கண்காட்சியைத் தொடங்குகிறது. இந்த மூன்று நாள் கலாச்சார கண்காட்சியில் பிரமிக்க வைக்கும் விளக்குகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீபாவளி சார்ந்த அலங்காரங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்த நிகழ்வுகளில் பொம்மை ஊர்வலங்கள், நாடக நிகழ்ச்சிகள், கவிதைகள், இசை நிகழ்ச்சிகள், டிசைன் ஒர்க் ஷாப்கள் மற்றும் பாரம்பரிய இந்திய உணவு வகைகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel