பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறந்த இந்தியரின் மரணத்திற்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது..!! ரத்தன் டாட்டாவின் பல்வேறு தகவல்களை கூறும் சிறப்பு பதிவு..!!
பிரபல இந்தியத் தொழிலதிபரும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் நவால் டாட்டா அவர்கள் வயது முதிர்வு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 9, 2024 அன்று இரவு உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு முகேஷ் அம்பானி, ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்களும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநில முதலமைச்சர்கள் போன்ற அரசியல் தலைவர்களும், இந்திய மற்றும் உலக மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தொழிலதிபரின் மரணத்திற்கு 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்து வருகிறது என்றால் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது. யார் இந்த ரத்தன் டாட்டா, அவர் செய்த சாதனைகள் என்ன, மக்கள் இவரை கொண்டாட காரணம் என்ன போன்ற டாட்டாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரைப் பற்றிய பல சுவாரஸ்சியமான தகவல்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.
இளமையும் கல்வியும்:
1937-ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாட்டாவுக்கு 10 வயது இருக்கும் போது, அவரது பெற்றோர் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இதனால் ரத்தன் டாட்டா மற்றும் அவரது சகோதரர்கள் அவர்களின் பாட்டி லேடி நவஜிபாயிடம் வளர்ந்தனர். சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து பாட்டியிடம் வளர்ந்த டாட்டா தனது குழந்தைப்பருவத்திலேயே நிறைய இடர்பாடுகளை சந்தித்தார்.
8ஆம் வகுப்பு வரை மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்த டாட்டா, மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி மற்றும் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளி போன்றவற்றில் படித்து 1955-இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, 1962 ஆம் ஆண்டில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் இளங்கலைப் பொறியியல் பட்டமும், 1975 ஆம் ஆண்டில் ஆர்வர்டு வணிகப் பள்ளியில் உயர் மேலாண்மை பட்டமும் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
இதற்கிடையில், 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய டாட்டா குழுமத்தின் தலைவர் ஜே. ஆர். டி. டாட்டா கூறிய அறிவுரையின்படி, IBM நிறுவனத்தில் கிடைத்த வேலையை நிராகரித்து விட்டு டாட்டா குழுமத்தில் சேர்ந்தார். இங்கிருந்துதான் டாட்டாவின் தொழில் வாழ்க்கை ஆரம்பமாகிறது.
டாட்டா தனது தொழில் வாழ்க்கையை மிகவும் அடித்தளத்தில் இருந்து உருவாக்க ஆரம்பித்தார். ஆம், முதலில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி செய்வதற்காக ஜாம்ஷெட்பூருக்கு சென்ற ரத்தன் டாட்டா, அங்குள்ள நீல காலர் பணியாளர்களுடன் (blue-collar employees) சேர்ந்து சுண்ணாம்புக்கல் வாருதல் மற்றும் சூளைகளைக் கையாளுதல் போன்ற பணிகளைச் செய்தார்.
அதைத் தொடர்ந்து, டாட்டா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து, இறுதியில் 1971-ஆம் ஆண்டு நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இயக்குனரானார். தொழிற்பயிற்சியிலிருந்து இயக்குனராக மாற அவருக்கு 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இருப்பினும், தனது திறமையை வளர்த்துக் கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார்.
அதையடுத்து,1991 இல் ஜே. ஆர். டி. டாட்டா ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு, டாட்டாவின் இதர நிறுவனங்களான டாட்டா மோட்டார்ஸ் டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா டீ, டாட்டா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாட்டா நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாட்டா பொறுப்பேற்றார்.
அவரது தலைமையின் கீழ், டாட்டா குழுமம் பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தியது. புத்திசாலித்தனம் மிகுந்த டாட்டா, டாட்டா குழுமத்தை உலகளவில் விரிவுபடுத்த தொடங்கினார். அதன் படி, சுமார் 100 நாடுகளுக்கும் மேல் விரிவடைந்தது. தனது குடும்ப வணிகத்தை சர்வதேச சாம்ராஜ்யமாக மாற்றினார். இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டாட்டா நிறுவனத்தை உலகளாவிய வணிகமாக மாற்றிய பெருமை ரத்தன் டாட்டாவையே சேரும்.
அசுர வளர்ச்சி கண்ட டாட்டா பிராண்ட்:
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் உப்பில் இருந்து, சாலைகளில் பார்க்கும் லாரி, கார் வரை பலவற்றிலும் டாட்டா பிராண்ட் இருக்கிறது. இன்றைக்கும் டாடா டிரக், பஸ் அல்லது SUV வகை கார்களை பார்க்காமல் நீங்கள் இந்தியாவில் ஒரு தெருவைக் கடக்க முடியாது. ஆம், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் எல்லா இடங்களிலும் டாட்டா தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பார்த்தும், பயன்படுத்திக் கொண்டும் இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல், ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள டாட்டா நானோ காரை தயாரித்து விற்பனை செய்து, சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற சாதாரண மக்களின் கனவை நினைவாக்கிய பெருமையும் ரத்தன் டாட்டாவுக்கு உண்டு. குறிப்பாக, டாட்டா இன்டிகா உலகின் மிகவும் மலிவான கார் எனப் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வாரி வழங்கிய நன்கொடையாளர்:
டாட்டா சமூகப் பொறுப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால், அறக்கட்டளை மூலம் பல மில்லியன் டாலர்களை நிதி உதவி செய்துள்ளார். குறிப்பாக, தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது வரை, டாட்டா குழுமம் கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இது இந்தியாவின் முன்னணி தொண்டு நிறுவனமாகவும் கருதப்படுகிறது.
மக்கள் கொண்டாடும் மாண்புமிகு மனிதர்
டாட்டா பெரிய சர்ச்சைகள் ஏதுமில்லாத ஒரு மூத்த தொழில்துறை தலைவர் ஆவார். இந்தியாவில் ரத்தன் டாட்டாவை போல மரியாதை கொண்ட தொழிலதிபர்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்று அவரது மறைவிற்கு ஒட்டு மொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவிக்கிறது என்றால், அதற்கு அவரது எளிமையும், அவர் செய்த தொண்டும் தான் காரணம்.
உயரிய விருதுகளுக்கு உரித்தானவர்
ரத்தன் டாட்டா மிகப்பெரிய தொழிலதிபர் என்பதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டிற்கு சிறந்த குடிமகனாகவும், பல மில்லியன் டாலர்களை நிதியுதவி செய்து மக்களுக்கு சிறந்த மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார்.
இவ்வாறு தொழில்துறை மற்றும் சமூகத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் அவருக்கு 2000-ஆம் ஆண்டில் இந்தியக் குடிமகனுக்கான மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் மற்றும் 2008-ஆம் ஆண்டில் இரண்டாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்தது.
இவை தவிர, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து கவுரவ டாக்டர் பட்டங்களையும் ரத்தன் டாட்டா பெற்றுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel