ஷார்ஜா – துபாய் இடையே இன்று முதல் மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்.. அறிவிப்பை வெளியிட்ட SRTA!

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA), ஷார்ஜாவின் அல் ரோல்லா நிலையத்திலிருந்து துபாயின் அல் சத்வா நிலையத்திற்கு இன்று (அக்டோபர் 28) முதல் மீண்டும் பேருந்து சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
ஷார்ஜா மற்றும் துபாய் இடையே நிலையான பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், இரு நகரங்களுக்கு இடையேயான E304 பேருந்து சேவை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவையால் ஷார்ஜா-துபாய் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்தில், துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் வாட்டர் கேனல் மற்றும் பிசினஸ் பே பகுதியில் கடல் போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருந்தது. இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படும் போக்குவரத்து அமைப்பு இந்த பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை இணைக்கிறது.
மேலும், அருகிலுள்ள நிலையங்களில் அணுகக்கூடிய சைக்கிள்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் போன்ற மொபிலிட்டி விருப்பங்களுடனும் இந்த சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுத்தத்திற்கு 2 திர்ஹம்ஸ் வீதம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த கடல் போக்குவரத்து சேவை ஒவ்வொரு 35 நிமிடங்களுக்கும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel