உலகளவில் நிலையான பொருளாதார நாடுகளில் அமீரகம் முதலிடம்!! வெளியான தரவரிசைப் பட்டியல்..!!

சமீபத்தில் வெளியான US News & World Reportஇன் படி, ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் பொருளாதார நிலைத்தன்மையான நாடு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது, 89 நாடுகளின் தரவரிசை பட்டியலில் அமீரகம் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தரவரிசைப் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலை வகிக்க, அதன் குறைந்த உற்பத்திச் செலவுகள், சாதகமான வரிச் சூழல், குறைந்தபட்ச அதிகாரத்துவம், ஊழல் இல்லாமை மற்றும் அரசாங்க நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை போன்ற காரணிகள் பங்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அமீரகத்தின் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐக்கிய அரபு அமீரகம பொருளாதார ஸ்திரத்தன்மையில் உலகில் முதலிடத்தில் உள்ளது. குறைந்த உற்பத்திச் செலவுகளைப் பேணுதல், சாதகமான வரிச் சூழலை உருவாக்குதல், அதிகாரத்துவத்தைக் குறைத்தல், ஊழலற்ற செயல்பாடுகளை உறுதி செய்தல் மற்றும் அரசாங்க நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துதல் போன்றவற்றில் எங்களின் நீடித்த அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது இந்த உயர்மட்ட வகைப்பாடு” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தரவரிசைகள் US News சிறந்த நாடுகளின் தரவரிசையின் ஒரு பகுதியாகும். மேலும், இந்த பட்டியல் நாடுகளின் பொருளாதார செயல்திறனை மட்டும் பிரதிபலிக்கவில்லை என்றும், நாடுகள் உலக அரங்கில் எவ்வாறு உணரப்படுகின்றன என்பதையும் பிரதிபலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, சாகசம், வணிகத்திற்கான திறந்தநிலை மற்றும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பத்து கருப்பொருள் துணைத் தரவரிசைகளில் நாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலிடம், வணிகத்திற்கான திறந்தநிலை என்ற துணைத் தரவரிசையின் கீழ் வருகிறது, இது வரி விகிதங்கள் மற்றும் அரசாங்க வெளிப்படைத்தன்மை போன்ற கூறுகளைக் கொண்டுள்ளது, இது உலகளாவிய வணிகம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியமானது.
இந்த ஆண்டுக்கான ஆய்வு, உலகெங்கிலும் உள்ள வணிக முடிவெடுப்பவர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட சுமார் 17,000 நபர்களிடம் கணக்கெடுப்பை உள்ளடக்கியது. இந்த கணக்கெடுப்பு, ஒரு நவீன தேசத்தின் வெற்றிக்கு பொருத்தமான தொழில்நுட்பத் தயார்நிலை மற்றும் வணிக நட்புறவு போன்ற 73 பண்புக்கூறுகளில் நாடுகளை மதிப்பீடு செய்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel