அபுதாபியின் அசத்தல் அறிவிப்பு..!! 2025 ஜூன் முதல் உணவுப் பொருட்களுக்கு ‘நியூட்ரி-மாரக்’ கட்டாயம்.. முழு விபரங்கள் உள்ளே..!!
அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அதிகாரிகள், அபுதாபி குடியிருப்பாளர்களிடையே உள்ள ஆபத்தான உடல் பருமன் விகிதங்களை கட்டுப்படுத்தும் வகையில், 2025 ஜூன் 1 ஆம் தேதிக்குள் ஐந்து உணவுப் பொருட்களில் வைக்கப்பட வேண்டிய புதிய ஊட்டச்சத்து தர நிர்ணய முறையை (nutrition grading system) அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மேலும், உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் (Nutri-Mark) இல்லாமல் சூப்பர் மார்க்கெட்களில் காணப்படும் தயாரிப்புகள் திரும்பப் பெறப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூட்ரி மார்க் என்றால் என்ன?
Nutri-Mark என்பது ADQCC மற்றும் ADPHC ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும், இது நவம்பர் 26 முதல் 28 வரை தலைநகரில் நடைபெறும் அபுதாபி சர்வதேச உணவுக் கண்காட்சியின் (ADIFE) போது அறிவிக்கப்பட்டது. முதல் கட்டத்திற்குப் பிறகு நியூட்ரி-மார்க்கின் கீழ் அதிக உணவுப் பொருட்கள் சேர்க்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நியூட்ரி-மார்க் ஒரு குறிப்பிட்ட பொருளின் ஊட்டச்சத்து மதிப்பை A முதல் E வரை தரப்படுத்துகிறது, இதில் A என்பது மிகவும் ஆரோக்கியமானது. புதிய திட்டத்தின் முதல் கட்டம் வேகவைத்த பொருட்கள், எண்ணெய்கள், பால் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்களும் உள்ளூர் முகவர்களும் தங்கள் தயாரிப்புகளை துல்லியமாக தரப்படுத்துவதற்கும், உணவுப் பொருளின் முன்பக்க பேக்கேஜில் நியூட்ரி-மார்க் லேபிள்களை உருவாக்குவதற்கும் விஞ்ஞானரீதியிலான ஆதரவு அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்னர், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆய்வு மேற்கொண்டு நியூட்ரி-மார்க் லேபிளிடப்பட்ட தயாரிப்புகளின் மாதிரிகளை எடுப்போம் என்றும், ஜூன் 1 முதல் நியூட்ரி-மார்க் இல்லாத தயாரிப்புகளை நாங்கள் கண்டறிந்தால், அவை திரும்பப் பெறப்படும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அபுதாபி தரம் மற்றும் இணக்க கவுன்சிலின் (ADQCC) மத்திய சோதனை ஆய்வகத்தின் நிர்வாக இயக்குனர் அப்துல்லா அல் முவைனி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சோதனை செய்யப்பட்ட மாதிரி உணவுப் பொருளானது துல்லியமற்ற தரவரிசையைக் காட்டினால் அது விற்பனையிலிருந்து நீக்கப்படும், மேலும் அதன் உற்பத்தியாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். எனினும் இதற்கான அபராதத் தொகை எவ்வளவு என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தரவரிசை முறையின் நோக்கங்கள்
புதிய தரவரிசை முறையானது, தயாரிப்புகளின் ஊட்டச்சத்து மதிப்புகள் பற்றிய தெளிவான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்களை நுகர்வோராகிய பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் உடல் பருமனை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அபுதாபி பொது சுகாதார மையத்தின் செயல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அஹ்மத் அல் கஸ்ராஜி கூறியுள்ளார்.
சமீபத்திய புள்ளிவிபரங்களின் படி, அபுதாபியில் வசிப்பவர்களில் பதிவுசெய்யப்பட்ட அதிக எடை கொண்டவர்களின் விகிதம் 61 சதவீதத்தை எட்டியுள்ளது, அதில் 22 சதவீதம் பேர் உடல் பருமனாக உள்ளனர், அதே நேரத்தில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் விகிதம் 37 சதவீதத்தை எட்டியுள்ளது, இதில் 18 சதவீதம் பேர் பருமனானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் இந்த எண்கள் அபுதாபியில் மட்டுமல்ல, உலகளவில் கூட இன்னும் திகிலூட்டும் வகையில் உயரலாம், தற்போதுள்ள எண்ணிக்கை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே, உடல் பருமன் குறித்த உண்மையான எண்ணிக்கை அநேகமாக இதற்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் எப்போதும் தயாரிப்புகளின் பின்பகுதியில் உள்ள அளவுகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், மேலும் சிலர் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து படிக்க நேரம் எடுக்காமல் போகலாம் என்று கூறிய அல் முவைனி, “உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பைப் பற்றிய புரிதல் இல்லாதது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுத் தேர்வுகளுக்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு அமைப்பை வழங்குவதே இதன் குறிக்கோள் என்றும், அதனால் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஊட்டச்சத்து பற்றி தகவலறிந்து தங்களின் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் எது என்பதை தெரிந்துகொண்டு ஷாப்பிங் செய்ய முடியும் என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
உணவுத் தயாரிப்புகள் ‘நல்லது’ அல்லது ‘கெட்டது’ என வகைப்படுத்தப்படுமா?
நியூட்ரி-மார்க் தயாரிப்புகளை ‘நல்லது’ அல்லது ‘கெட்டது’ என்று முத்திரை குத்தாது, இது ஒத்த தயாரிப்புகளுக்கு இடையே உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கங்களில் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. இதே போன்ற ஊட்டச்சத்து மதிப்பீட்டு முறை பல நாடுகளில் வெற்றிகரமாக பின்பற்றப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு எதிர்கால திட்டமானது, சிறந்த நியூட்ரி-மார்க் தரவரிசையை அடைவதற்காக உணவுப் பொருட்களின் மறு-வடிவமைப்பை உள்ளடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு E-கிரேடிங்கைக் கொண்டிருந்தால், அது C அல்லது Dக்கு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள். Link: Khaleej Tamil Whatsapp Channel