துபாய்: முதல் 9 மாதங்களில் 68 மில்லியன் பயணிகளை கையாண்டு சாதனை படைத்த துபாய் ஏர்போர்ட்…
உலகின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகின்றது. தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையானது ஏறுமுகம் கண்டு வரும் நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையம், நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் 68 மில்லியன் பயணிகளை வரவேற்று சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் மாத இறுதிக்குள் 68.6 மில்லியன் விருந்தினர்களை துபாய் விமான நிலையம் வரவேற்றது என்றும், இது நான்காவது காலாண்டில் இன்னும் அதிகளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தாண்டின் முதல் பாதியின் வேகத்தோடு மூன்றாவது காலாண்டிலும் பயணிகளின் எண்ணிக்கை காணப்பட்டது என கூறப்பட்டுள்ளது. அதாவது மூன்றாம் காலாண்டில், DXB 23.7 மில்லியன் பயணிகளை பதிவு செய்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இது ஆண்டுக்கு ஆண்டு 6.3 சதவீத வளர்ச்சிக்கு பங்களித்து, ஆண்டு தொடக்கம் முதல் இன்று வரை 68. மில்லியன் பயணிகளைக் கொண்டு வந்துள்ளது.
மேலும், DXB மூன்றாம் காலாண்டில் 111,300 விமானங்களை நிர்வகித்து, முதல் ஒன்பது மாதங்களில் மொத்த விமான இயக்கங்கள் 327,700 ஐ எட்டியதாக கூறப்பட்டுள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 6.4 சதவீதம் அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த சாதனை எண்ணிக்கையைத் தொடர்ந்து, இந்தாண்டின் இறுதி காலாண்டில், 23 மில்லியன் பயணிகள் DXB வழியாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி மூன்று மாதங்களில் குளிர்காலத்தாலும் விடுமுறை நாட்கள் வருவதாலும் வெளிநாட்டவர்கள் வீட்டிற்குச் செல்வதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் குளிர்காலத்தை அனுபவிக்க வரும் விருந்தினர்களாலும் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், நான்காம் காலாண்டில் பயணிகள் போக்குவரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது குறித்து துபாய் விமான நிலையத்தின் CEO பால் கிரிஃபித்ஸ் பேசிய போது, நேரடி பயணிகள் போக்குவரத்து டிரான்ஸிட் போக்குவரத்தை மிஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது துபாயின் பரிணாம வளர்ச்சியை ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், வாழ்வதற்கு, வேலை மற்றும் வணிகம் செய்வதற்கான உலகளாவிய கவர்ச்சிகரமான இடமாக மாறியதை பிரதிபலிப்பதாகவும், நகரத்தின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தை மற்றும் சிறந்த திறமையாளர்களுக்கான இடமாக உயர்வதாகவும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய கிரிஃபித்ஸ், “மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பே விமான நிலையம் அதிகளவு பயணிகள் மற்றும் வலுவான செயல்பாட்டு செயல்திறனை உந்தியது மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எங்களை முதலிடத்தில் வைத்திருக்கிறது. சிறந்த விருந்தோம்பல் அனுபவத்தை வழங்குவதில் எங்கள் வெற்றியை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் DXB தொடர்ந்து எங்களின் முக்கிய மையமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த சந்தைகள் மற்றும் இலக்குகள்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் 8.9 மில்லியன் பயணிகளுடன், DXB இன் மிகப்பெரிய இலக்கு சந்தையாக இந்தியா தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதையடுத்து, சவூதி அரேபியா 5.6 மில்லியன் பயணிகள், இங்கிலாந்து 4.6 மில்லியன் பயணிகளைக் கொண்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மற்ற முக்கிய சந்தைகளில் பாகிஸ்தான் (3.4 மில்லியன்), அமெரிக்கா (2.6 மில்லியன்) மற்றும் ஜெர்மனி (2 மில்லியன்) ஆகியவை அடங்கும்.
இதேபோல், நகர வாரியாகப் பார்க்கையில், லண்டன் 2.9 மில்லியன் பயணிகளுடன் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து ரியாத், 25.8 சதவீதம் அதிகரித்து 2.3 மில்லியனாக இருந்தது. மும்பை (1.8 மில்லியன்), ஜெட்டா (1.7 மில்லியன்), புது தில்லி (1.6 மில்லியன்), மற்றும் இஸ்தான்புல் (1.3 மில்லியன்) ஆகியவை மற்ற முக்கிய நகரங்களில் அடங்கும்.
இந்த காலகட்டத்தில், சுமார் 60.1 மில்லியன் லக்கேஜ்களை 99.3 சதவீத துல்லிய விகிதத்துடன் DXB செயலாக்கியுள்ளது. ஏறத்தாழ 92 சதவீத பயணிகளை அரைவிங் விமானம் ஸ்டாண்டுக்கு வந்த 45 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரபரப்பான காலம்
பொதுவாக குளிர்காலத்தில் துபாய் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படும். அதில் இந்த ஆண்டை பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பாவில் இருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது, கூடுதலாக 237,000 இடங்கள் (Q3 உடன் ஒப்பிடும்போது), மற்றும் காமன்வெல்த் ஆஃப் இன்டிபென்டன்ட் ஸ்டேட்ஸ் (CIS) பிராந்தியத்தில் 301,000 இடங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel