53வது அமீரக தேசிய தினம்: தேசிய தின கொண்டாட்டங்களுக்கு ‘Eid Al Etihad’ என அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்ட ஏற்பாட்டுக் குழு!!
துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குவைன், ராஸ் அல் கைமா ஆகிய ஏழு எமிரேட்டுகள் ஒன்றிணைந்து டிசம்பர் 2, 1971 அன்று ஐக்கிய அரபு அமீரகம் உருவானதை நினைவுகூரும் வகையில், நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் 2-ம் தேதியன்று தேசிய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு 53 வது தேசிய தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், தேசிய தின கொண்டாட்டங்களுக்கு ‘ஈத் அல் எதிஹாத் (Eid Al Etihad)’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ பெயர் ‘யூனியன்’ என்ற கருப்பொருளை வலியுறுத்துகிறது என்றும் யூனியன் என்பது நாட்டின் அடையாளம், பாரம்பரியம், ஒற்றுமை, வலிமை மற்றும் தேசியப் பெருமை ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினத்தை அனுசரிக்கும் வகையில், எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏழு எமிரேட்டுகளிலும் உள்ள ‘ஈத் அல் எதிஹாத் மண்டலங்களில்’ பல செயல்பாடுகள் இருக்கும் என்று குழு தெரிவித்துள்ளது.
இந்தாண்டு தேசிய தினம் நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. ஆகவே, கழிவுகளைக் குறைத்தல், ஏற்கனவே உள்ளதை மறுசுழற்சி செய்தல் அல்லது வளங்களை மறுபயன்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் குடியிருப்பாளர்கள் இதில் பங்கேற்குமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது குறித்து 53 வது ஈத் அல் எதிஹாத் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் மூலோபாய மற்றும் ஆக்கப்பூர்வமான விவகாரங்களின் இயக்குனர் ஈசா அல்சுபௌசி பேசிய போது, “ஏழு எமிரேட்ஸ் ஒன்றிணைந்ததைக் கொண்டாடும் இந்த வரலாற்றுத் தருணத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விழாக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஊக்கமளிப்பதற்கும் உதவுவதற்கும் விரிவான வழிகாட்டிகளை உருவாக்கியுள்ளோம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் குடும்பங்கள் அவற்றைப் பதிவிறக்கம் செய்து, இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தில் சேர நாங்கள் ஊக்குவிக்கிறோம்” என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டின் தேசிய தின விடுமுறையானது அமீரகக் குடியிருப்பாளர்கள் நடப்பு ஆண்டில் அனுபவிக்கும் கடைசி நீண்ட வார விடுமுறை நாட்கள் ஆகும். டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகள் முறையே திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வருவதால், சனி, ஞாயிறு வார இறுதியுடன் சேர்த்து நான்கு நாட்கள் விடுமுறையை அனுபவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel