உலக செய்திகள்

FIFA உலகக்கோப்பையை நடத்தவிருக்கும் சவுதி அரேபியா..!! வெளியானது அறிவிப்பு..!!

உலகளவில் அதிகளவு ரசிகர்களைக் கொண்டிருக்கும் விளையாட்டாக கால்பந்து உள்ளது. உலகின் மூலை முடுக்கெல்லாம் கால்பந்து போட்டிக்கான ரசிகர் பட்டாளம் ஏராளம் உண்டு. கால்பந்தாட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது போன்றே FIFA உலக கோப்பை கால்பந்து போட்டிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனாலேயே சமீப காலங்களில் ஒவ்வொரு முறையும் FIFA உலக கோப்பையை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த FIFA 2022 உலக கோப்பை கால்பந்து போட்டியானது வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்காகவென பிரத்யேக விசாக்களையும் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு கத்தார் அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்பொழுது மற்றொரு வளைகுடா நாடான சவூதி அரேபியாவும் FIFA உலக கோப்பையை நடத்தவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சவூதி அரேபியா வரும் 2034 இல் ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 2030 பதிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் மொராக்கோவில் நடைபெறும் என்றும், தென் அமெரிக்க நாடுகளில் மூன்று போட்டிகள் நடத்தப்படும் என்றும் உலக கால்பந்து நிர்வாகக் குழு ஃபிஃபா (Fifa) உறுதிப்படுத்தியுள்ளது.

மொராக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முன்மொழிவின்படி 2030 உலகக் கோப்பை மூன்று கண்டங்கள் மற்றும் ஆறு நாடுகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பராகுவே ஆகியவை போட்டியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் கொண்டாட்ட விளையாட்டுகளை நடத்துகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

1930 இல் உருகுவே முதல் உலகக் கோப்பையை நடத்தியது, அதே நேரத்தில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயினும் போட்டியை அரங்கேற்றியுள்ளன. போர்ச்சுகல், பராகுவே மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் முதல் முறையாக போட்டியை நடத்தும் நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க 2034-ம் ஆண்டு போட்டியை சவூதி நடத்தவிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், X தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், 2030 உலகக் கோப்பையை நடத்துவதற்கான முயற்சியை உறுதி செய்ததற்காக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் மொராக்கோவின் மன்னர் ஆறாம் முகமதுவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட இடுகையில், “இது அரேபியர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் மற்றும் உலக அரங்கில் நமது செல்வாக்கு அதிகரித்து வருவதற்கான சான்றாகும். கடவுள் விரும்பினால், 2030 மற்றும் 2034ல் இரண்டு கண்கவர் போட்டிகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, குளோபல் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களும், 2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் வரலாற்றில் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய போது, “2034 உலகக் கோப்பை அநேகமாக சிறந்த உலகக் கோப்பையாக இருக்கும். சவூதியில் உள்கட்டமைப்பு, மைதானங்கள், ரசிகர்களுக்கான நிலைமைகள், விமான நிலையங்கள் மற்றும் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இது போன்ற  முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!