ADVERTISEMENT

அமீரகத்தில் குறைந்து வரும் வெப்பநிலை.. இன்று அதிகாலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவு….

Published: 17 Dec 2024, 4:04 PM |
Updated: 17 Dec 2024, 4:07 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து நாள் முழுவதும் இதமான வானிலை நிலவி வரும் நிலையில், நாட்டிலேயே குறைந்தபட்ச வெப்பநிலையாக ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் 4.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வானிலை தொடர்பாக NCM வெளியிட்ட செய்திக்குறிப்பில், இனி வரும் நாட்களில் நாட்டில் குளிர்ச்சியான சூழ்நிலைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நாட்டின் பல பகுதிகளில் நாள் முழுவதும் இதமான வெப்பநிலை நிலவும், இரவில் ஈரப்பதமாக மாறும் மற்றும் இது நாளை புதன்கிழமை காலை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஈரப்பதத்தின் அதிகரிப்பால் சில உள் பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம் உள் பகுதிகளில் பகல் நேரங்களில் அதிகபட்சமாக 29ºC வரை வெப்பநிலை உயரும் என்றும் தேசிய வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, காலநிலை நிபுணரான டாக்டர் அஹ்மத் ஹபீப் செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, “டிசம்பர் 16 முதல், வடமேற்கு காற்று குளிர்ச்சியான காற்றுடன் சேர்ந்து, படிப்படியாக வெப்பநிலை குறைவதற்கு வழிவகுக்கும். எனவே, நாடு முழுவதும் வெப்பநிலை 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும், மேலும் இது மேற்கு பகுதிகளில் தொடங்கி படிப்படியாக நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம் எப்போது தொடங்குகிறது?

தற்சமயம் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி முதல் நாட்டில் அதிகாரப்பூர்வமாக குளிர்காலம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டிசம்பர் மற்றும் ஜனவரி முழுவதும் வெப்பநிலை படிப்படியாக குறையும். இருப்பினும், உள்வரும் காற்றின் திசை மற்றும் தன்மை போன்ற வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து இது மாறுபடும். குளிர் காற்று, குறிப்பாக இரவில், நாட்டின் உள் பகுதிகளை பாதிக்கும் என்று வானிலை நிபுணர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel