வேலைக்கு செல்லும் வழியில் நடந்த கோர விபத்து.!! 9 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக பலி!! சவூதியில் நடந்த துயர சம்பவம்..!!

சவுதி அரேபியாவில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் ஜிசான் பகுதிக்கு அருகில் நடந்த பேருந்து விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜித்தாவில் உள்ள இந்திய தூதரகம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சவூதி அரேபியாவின் மேற்கு பிராந்தியத்தில், ஜிசான் அருகே ஒரு சாலை விபத்தில் ஒன்பது இந்திய நாட்டினரின் சோகமான இழப்பிற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணைகளுக்கு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்ட தூதரகம், இத்தகைய துயரமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் உறுதிப்படுத்தியதுடன் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
விபத்து எப்படி நடந்தது?
சுமார் 26 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, பணியிடத்திற்கு செல்லும் வழியில் டிரெய்லருடன் (trailer) மோதியபோது விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சவூதியின் மக்காவுக்கு தெற்கே அமைந்துள்ள ஆசிர் மாகாணத்தின் வாதி பின் ஹாஷ்பால் பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு முன்னதாக இந்த சாலை விபத்து நடந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கிய தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் உட்பட பதினொரு தொழிலாளர்கள் மிதமான காயங்களுக்கு ஆளானாதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியர்கள் மட்டுமின்றி, நேபாளம் மற்றும் கானாவைச் சேர்ந்த மற்ற ஆறு தொழிலாளர்களும் உயிரிழந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள், விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு வருத்தப்படுவதாக கூறி, தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் ஜித்தாவில் உள்ள தூதர் ஜெனரலுடன் பேசியதாகவும், இந்த துயரமான சூழ்நிலையில் முழு ஆதரவை வழங்குவதாகவும் X தளத்தில் தெரிவித்துள்ளார். தற்சமயம், விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel