அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

இதுவரை இல்லாதளவு அதிகளவு குடிமக்களை தனியார் துறையில் பணியமர்த்தியுள்ள அமீரகம்.. வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பா..??

ஐக்கிய அரபு அமீரக அரசானது வெளிநாட்டவர்களுக்கு பதிலாக தனது நாட்டு குடிமக்களை நிறுவனத்தில் பணியமர்ததுவதற்கான எமிராட்டிசேஷன் என்ற திட்டத்தை அறிவித்து அதன்படி கடந்த ஒரு சில வருடங்களாக அதிகளவு எமிராட்டிகளை தனியார் துறையில் பணியமர்த்தி வருகின்றது. இதன் மூலம் முன்னர் அரசு துறையில் மட்டுமே பெரும்பாலான எமிராட்டிகள் பணிபுரிந்து வந்த நிலையில் இந்த திட்டத்தின் விளைவாக அதிகளவு எமிராட்டிகள் தனியார் துறையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தனியார் துறையில் குடிமக்களை பணியமர்த்தப்படும் எண்ணிக்கை வீதத்தையும் அரசு அதிகரித்து வருகின்றது. நாட்டின் எமிராட்டிசேஷன் முயற்சிகள், பெரும்பாலான எமிராட்டி திறமையாளர்களை நிறுவனங்களில் பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டதுடன், இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் முதன்முறையாக, ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை இல்லாத அளவுக்கு தனது நாட்டு குடிமக்களை பணியமர்த்தி அதிக எமிராட்டிசேஷன் விகிதத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது, கடந்த ஆண்டான 2024 இல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் எமிராட்டிகளின் எண்ணிக்கை 131,000 ஐ எட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அடைந்த பல குறிப்பிடத்தக்க வெற்றிகளில் எமிராட்டிசேஷன் எண்ணிக்கையும் ஒன்றாகும் என்று கூறிய ஷேக் முகமது, நஃபிஸ் (nafis) திட்டம் மற்றும் அது வழங்கும் நன்மைகளையும் எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டிய பிற விஷயங்களையும் துணைத் தலைவர் எடுத்துரைத்தார்.

பொருளாதார வளர்ச்சி

ஷேக் முகமது வெளியிட்ட தகவலின் படி, வெளிநாட்டு வர்த்தகம் முதன்முறையாக 2.8 டிரில்லியன் திர்ஹம்ஸைத் தாண்டியது. மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 130 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நேரத்தில் தொழில்துறை ஏற்றுமதியின் மதிப்பு 190 பில்லியன் திர்ஹம்களை எட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 200,000 புதிய நிறுவனங்கள் இணைவதன் மூலம் வணிகச் சூழல் வலுவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, எமிராட்டி இளைஞர்களும் சுமார் 25,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைத் தொடங்கியுள்ளதாகவும் ஷேக் முகமது கூறியுள்ளார்.

சட்டம்

இவை தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்கத்தில் இருந்து வெளியிடப்பட்ட சட்டங்களை புதுப்பிப்பதற்கான மூன்று ஆண்டு திட்டத்தையும் அமீரக அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஒழுங்குமுறை சட்டங்களில் 80 சதவீதத்தை குழு புதுப்பித்துள்ளதாக ஷேக் முகமது தெரிவித்துள்ளார். இது குறித்து துணைத்தலைவர் பேசிய போது, “சுமார் 2,500 அரசு அதிகாரிகள் ஒன்றாக இணைந்து இந்த கொள்கைகளை நிறைவேற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எமிராட்டிசேஷன் திட்டமானது அமீரக குடிமக்களுக்கு பயன் தரும் என்றபோதிலும் இதனால் அமீரகத்தில் பணிபுரியும் மற்றும் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான பணியிடங்கள் அமீரக குடிமக்களை பணியமர்த்துவதால் பறிபோகும் என்பதில் சந்தேகமில்லை.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!