அமீரக செய்திகள்

துபாய்: குளோபல் வில்லேஜில் GDRFA நடத்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.. GDRFA சேவைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம் என தகவல்…

துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA), எமிரேட்டின் பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜில் “We Are Here For You” என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி தொடங்கிய இந்த பிரச்சாரம், அடுத்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குளோபல் வில்லேஜின் பிரதான திரையரங்கிற்கு அருகில் தினமும் மாலை 4 மணி முதல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே, GDRFA சேவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கவும், நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒரு பிரத்யேக குழு தயாராக இருக்கும். எனவே, குளோபல் வில்லேஜிற்கு வரும் பார்வையாளர்கள் கோல்டன் விசா, நுழைவு அனுமதி, குடியுரிமை சேவைகள் மற்றும் GCC நாடுகளில் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான அனுமதிகள் போன்ற பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய பயனர் நட்பு தளத்தை அணுகுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகக் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இருவருடனும் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான அமைப்பின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பிரச்சாரம் உள்ளது என்று GDRFA இன் நிறுவன ஆதரவுத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் அப்துல் சமத் ஹுசைன் கூறியுள்ளார்.

இதற்கிடையில், GDRFA இன் “Salem and Salama” பங்கேற்புடன் வாராந்திர போட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசுகள் உட்பட சில செயல்பாடுகளை இந்த பிரச்சாரம் கொண்டுள்ளதாகவும், பங்கேற்பாளர்களுக்கு வேடிக்கையான பரிசுகள் வழங்கப்படுவதாகவும்  கூறப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!