இந்திய பெண்ணிற்கு மரண தண்டனை விதித்த ஏமன்.. போராடும் இந்தியா..!! என்ன நடந்தது..??

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமானிற்கு அருகில் உள்ள ஏமன் நாட்டில் வசித்து செவிலியராக பணிபுரிந்து வந்த இந்திய பெண்ணிற்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்துள்ளது. 37 வயதான இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு கடந்த திங்கட்கிழமை ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவருக்கு உதவ இந்திய அரசாங்கம் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து அளித்து வருகின்றது.
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் என்பவர் பேசுகையில், “நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக, முன்னேற்றங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்… அவரது குடும்பத்தினர் பொருத்தமான விருப்பங்களை ஆராய்ந்து வருகின்றனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அரசாங்கம் இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் நீட்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த நிமிஷா பிரியா?
2017 ஆம் ஆண்டில் தனது வணிக கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொன்றதற்காக திருமதி பிரியா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால், இது கொலை வழக்காக மாறியது. அவரை தற்போது ஏமனில் இருக்கும் சனாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களின் கதை 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. நிமிஷா பிரியாவும், ஏமன் நாட்டவரான தலால் அப்தோ மஹ்தியும் கூட்டு சேர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஏமனின் தலைநகரான சனாவில் கிளினிக்கை தொடங்கியுள்ளனர். ஏனெனில் ஏமனின் சட்டத்தின் கீழ், அந்த நாட்டினர் மட்டுமே கிளினிக்குகள் மற்றும் வணிகங்களை அமைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே, நிமிஷா கிளினிக்கைத் தொடங்க மஹ்தியின் ஆதரவை நாடியுள்ளார். இருவரும் கூட்டு சேர்ந்து கிளினிக்கை தொடங்கியுள்ளனர். ஆனால், குறுகிய காலத்திலேயே இருவருக்கும் இடையேயான கூட்டாண்மை மோசமடைந்துள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான மஹ்தி, நிமிஷா பிரியாவை சித்திரவதை செய்யத் தொடங்கியிருக்கிறார். மேலும், நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றி, போதையில் பலமுறை துப்பாக்கி முனையில் மிரட்டி கிளினிக்கில் இருந்த பணத்தையும், ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டதாகவும் நிமிஷா குற்றம் சாட்டியுள்ளார்.
அதையடுத்து, நிமிஷா பிரியா தனது பாஸ்போர்ட்டை மஹதியிடம் இருந்து மீட்டெடுக்க, மஹ்திக்கு போதை மருந்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த முயற்சி மஹ்தியின் மரணத்திற்கு வழிவகுத்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 2018 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது, அது பின்னர் 2023 இல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தான், நிமிஷா பிரியாவுக்கு ஆதரவாக இந்தியா அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel