குளிர்கால சுற்றுலாவில் முதலிடம் பிடித்த அமீரகம்..!! 2033 க்குள் 45 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என கணிப்பு…

உலக பொருளாதார மன்றத்தின் 2024 பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டின் (TTDI) படி, குளிர்கால சுற்றுலாவுக்கான சிறந்த இலக்குகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முந்தைய இடத்தை விட 7 இடங்கள் முன்னேறி, அரபு பிராந்தியத்தில் முதலிடத்திலும், உலகளவில் 18வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், சர்வதேச சுற்றுலா வருவாயில் முதல் 10 நாடுகளில் உள்ள ஒரே மத்திய கிழக்கு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 29.2 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஐக்கிய அரபு அமீரகம் ஈர்த்துள்ளதாக உலக பயண மற்றும் சுற்றுலா கவுன்சிலின் (World Travel & Tourism Council) 2024 அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இது 2023 உடன் ஒப்பிடும்போது 15.5% அதிகரிப்பாகும். இந்நிலையில் 2033 ஆம் ஆண்டுக்குள், அமீரகத்துக்கு வருகை தரும் சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 45.5 மில்லியனை எட்டும் என்று அறிக்கை மேலும் கணித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், உலகளாவிய சுற்றுலாத் தலமாக தனது நிலையை வலுப்படுத்தி வருகிறது. அதன் லட்சிய சுற்றுலா உத்தி 2031 (Tourism Strategy 2031) இன் ஒரு பகுதியாக, சுற்றுலா முதலீடுகளில் 100 பில்லியன் திர்ஹம்ஸ் ஈர்ப்பதையும், 40 மில்லியன் ஹோட்டல் விருந்தினர்களை வரவேற்பதையும் நாடு நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது, சுற்றுலாவின் உச்ச பருவமாக அமீரகத்தில் குளிர்காலம் நிலவி வருவதால், அதன் லேசான வானிலை மற்றும் ஓய்வு மற்றும் ஷாப்பிங் முதல் வணிகம் மற்றும் இயற்கை சார்ந்த அனுபவங்கள் வரை பல்வேறு சலுகைகள் காரணமாக நாட்டில் சுற்றுலாவுக்கு ஒரு சிறந்த நேரமாகும். இந்த குளிர்கால சீசனில், மலைகள், பாலைவனங்கள், கடற்கரைகள் மற்றும் இயற்கை இருப்புக்கள் உள்ளிட்ட பிரம்மிப்பூட்டும் நிலப்பரப்புகளை பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும்.
சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகம் அதன் “World’s Coolest Winter” என்ற பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பை அறிமுகப்படுத்தியது. இந்த பிரச்சாரம் அமீரகக் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, முன்னணி உலகளாவிய சுற்றுலா மையமாக நாட்டின் 53 ஆண்டுகால குறிப்பிடத்தக்க சாதனைகளை மேலும் வலுப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், உலகின் பல பகுதிகள் குளிர்காலத்தில் உறைபனியை அனுபவிக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் அமீரகத்தின் வெப்பமான காலநிலையை அனுபவிக்க நாட்டிற்கு வருகிறார்கள். அதன் இனிமையான வானிலைக்கு கூடுதலாக, நாடு பாலைவன சஃபாரிகள், மலை சாகசங்கள், முகாம் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆய்வு போன்ற பல்வேறு செயல்பாடுகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel