துபாயில் நெரிசலைக் குறைக்க கடுமையான விதிகள் தேவை.. குரல் எழுப்பிய FNC உறுப்பினர்..!!

துபாயில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகரம் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சாலைகளில் உள்ள அழுத்தத்தைக் குறைக்க புதிய கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து துபாயின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய் அவர்கள் பேசுகையில், துபாயின் வாகன வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்தை தாண்டியுள்ளதாகவும், இது உலகளாவிய விகிதமான 2 சதவீதத்தை விட மிக அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த எழுச்சி அசாதாரணமானது என்று விவரித்த அமைச்சர், வாகன உரிமையை நிர்வகிக்கவும் நெரிசலைக் குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் சட்டங்களின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளார். அதற்கேற்ப வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பின்வரும் தீர்வுகளை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது: அவை,
- துபாய் மற்றும் பிற எமிரேட்களுக்கு இடையேயான சாலை வழித்தடங்களை மேம்படுத்துதல்.
- அதிகரித்து வரும் போக்குவரத்தை ஈடுசெய்ய புதிய சாலை நெட்வொர்க்குகளை உருவாக்குதல்.
- ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெகுஜன போக்குவரத்து ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்.
- புதிய பொது போக்குவரத்து விருப்பங்களை அறிமுகப்படுத்துதல்.
துபாய் மற்றும் ஷார்ஜா இடையே மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து FNC உறுப்பினர் அட்னான் அல் ஹம்மாதி எழுப்பிய கேள்விகளுக்கு அல் மஸ்ரூயி பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும், துபாயின் வாகன வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தாலும், துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் உம் அல் குவைனில் மொத்த வாகன அதிகரிப்பு 23 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது பிராந்தியத்திற்கு ஒரு தீவிர கவலையாக உள்ளது என்றும் விவரித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அல் ஹம்மாதி, 1.2 மில்லியன் கார்கள் துபாயில் தினமும் வந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார், இது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 850,000 ஆக இருந்தது, கூடுதலாக, 4,000 புதிய ஓட்டுநர் உரிமங்கள் தினமும் வழங்கப்படுகின்றன, இது சாலைகளை மேலும் சிக்கலாக்குகிறது என்றும் அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இந்த நெருக்கடிக்கு எப்படி வசதியான தீர்வுகளைக் கண்டறிவது என்றும் அல் ஹம்மாதி கேள்வியெழுப்பியுள்ளார்.
நீண்ட பயணங்களைத் தவிர்க்க பலர் இப்போது தற்காலிக அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுக்கவோ அல்லது தங்கள் பணியிடங்களுக்கு அருகில் பகிரப்பட்ட குடியிருப்புகளில் தங்கவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்த அல் ஹம்மாதி, “போக்குவரத்து நெரிசல் ஒரு தொடர்ச்சியான மற்றும் வேதனையான பிரச்சினை, எங்களுக்கு உடனடி, நடைமுறை தீர்வுகள் தேவை” என்றும் குரல் கொடுத்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel