அமீரக செய்திகள்

துபாய்: ஆன்லைனில் ஒரே நாளிலேயே குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பெறலாம்.. விண்ணப்பிப்பது எப்படி..??

துபாயில் உள்ள பெற்றோர்கள் இப்போது தங்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சிரமம் இல்லாத மற்றும் வசதியான வழியில் எளிதாக பெற முடியும். அதாவது ஒரு சில நிமிடங்களிலேயே, விண்ணப்பிப்பதில் இருந்து சான்றிதழ் வழங்குவது வரை முழு செயல்முறையையும் ஆன்லைனில் முடிக்க முடியும்.

துபாய் சுகாதார ஆணையம் (DHA) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் சேவை பெற்றோர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் செல்லாமல் விண்ணப்பிக்கவும், ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், சான்றிதழைப் பெறவும் அனுமதிக்கிறது. அமீரகத்தில் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்கள் அரபு, ஆங்கிலம் அல்லது உருது மொழிகளில் கிடைக்கின்றன.

துபாய் மருத்துவமனைகள் பிறப்பு அறிவிப்பையும் தேவையான ஆவணங்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்கும்போது இந்த செயல்முறையானது தொடங்குகிறது. பின்னர் பெற்றோர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணங்களைச் செலுத்தி, ஒரு வேலை நாளுக்குள் பிறப்பு சான்றிதழைப் பெறலாம். சான்றிதழ்கள் மின்னஞ்சல் அல்லது மொபைல் வழியாக வழங்கப்படுகின்றன, மேலும் கூரியர் சேவை மூலம் அச்சிடப்பட்ட நகலை வாங்குவதற்கான விருப்பமும் உள்ளது.

தேவையான ஆவணங்கள்:

  • அசல் எமிரேட்ஸ் ஐடி அல்லது பாஸ்போர்ட் (கணவன் மனைவி இருவருக்கும்)
  • அசல் திருமணச் சான்றிதழ் அல்லது குழந்தையின் பரம்பரையை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணம்
  • மருத்துவமனையால் முத்திரையிடப்பட்ட அசல் பிறப்பு அறிவிப்பு
  • இந்த ஆவணங்களின் டிஜிட்டல் பிரதிகள் (மருத்துவமனை சரிபார்ப்புக்குப் பிறகு)

தொலைந்த பிறப்புச் சான்றிதழை மாற்றுவதற்கு:

  • விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் (தந்தை அல்லது தாய் சமர்ப்பிக்கலாம்)
  • இரு பெற்றோரின் எமிரேட்ஸ் ஐடிகள் அல்லது பாஸ்போர்ட்களின் நகல்கள்
  • சான்றிதழ் தொலைந்ததை உறுதிப்படுத்தும் போலீஸ் அறிக்கை (அசல் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால்)

கூடுதல் நகல்களை மீண்டும் பெற:

  • விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்
  • அசல் பிறப்புச் சான்றிதழின் நகலை பதிவேற்றவும்
  • பெற்றோரின் எமிரேட்ஸ் ஐடிகள் அல்லது பாஸ்போர்ட்கள் இரண்டின் நகல்களையும் இணைக்கவும்

விண்ணப்ப செயல்முறை:

1. DHAயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் (dha.gov.ae).
2. அங்கு ‘Individual Services’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘Issue a New, Copy, or Replacement Birth Certificate’ என்பதைக் கிளிக் செய்யவும்.

3. அடுத்தபடியாக,’Access Service’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் UAE PASS கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். இல்லையென்றால், உங்கள் முழுப் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்.
4. உள்நுழைந்ததும், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, 70 திர்ஹம்ஸ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
5. உடனடி உதவிக்கு, பெற்றோர்கள் DHA இன் கட்டணமில்லா எண் 800342 (800 DHA) ஐத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த புதிய அமைப்பு விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதையும், துபாயில் உள்ள குடும்பங்களுக்கு பிறப்பு சான்றிதழை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!