ஈத் அல் ஃபித்ர் 2025: மார்ச் 29 மாலை பிறையை பார்க்க அழைப்பு விடுத்த சவுதி அரேபியா..!!

இந்த வருடத்தின் புனித ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 27 நாட்களை கடந்து விட்ட நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்கள் வரும் மார்ச் 29, 2025 சனிக்கிழமை மாலை வானில் பிறையை பார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இது ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டு ரமலான் 29 ஆம் தேதியைக் குறிக்கிறது.
மேலும், பிறையை வெறும் கண்ணால் அல்லது தொலைநோக்கியால் பார்க்கும் எவரும், அருகிலுள்ள நீதிமன்றம் அல்லது கண்காணிப்பு மையத்திற்கு தெரிவிக்குமாறு சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 1, 2025 சனிக்கிழமை அன்று இந்த வருட ரமலானின் முதல் நாள் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
பொதுவாக அரபு மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்களாக இருக்கும். ரமலான் மாதம் முடிந்து அடுத்ததாக தொடங்கும் ஷவ்வால் மாதத்தின் 1ம் தேதியில் ஈத் அல் ஃபித்ர் பண்டிகை உலகமெங்கும் கொண்டாடப்படும். இது பிறை பார்ப்பதை பொருத்தே உறுதிசெய்யப்படும் என்பதால், ரமலான் 29 சனிக்கிழமை அன்று மாலை பிறையை பார்க்க குடிருப்பாளர்களுக்கு சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.
விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா தனியார் மற்றும் இலாப நோக்கற்ற துறைகளுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 2, 2025 வரை நான்கு நாள் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அறிவித்துள்ளது, ஏப்ரல் 3 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கும். இதனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார இறுதியுடன் சேர்த்து தனியார் துறை ஊழியர்களுக்கு 6 நாள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel