ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 37 வயதான இந்தியர் ஹரிராஜ் சுதேவன் என்பவர் , அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தனது மனைவி மற்றும் மகனை தாய் நாட்டிற்கு வழியனுப்பி வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இத்துயர சம்பவம் அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த ஹரிராஜ், அவரது மனைவி டாக்டர் அனு அசோக் மற்றும் அவர்களது 10 வயது மகன் இஷான் தேவ் ஹரி ஆகியோருடன் அபுதாபியில் 10 நாட்களை கழித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர்களை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
“இந்த செய்தி வந்தபோது அவர்கள் கேரளாவில் உள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். நாங்கள் அனைவரும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம்,” என்று கேரளாவைச் சேர்ந்த ஹரிராஜின் மாமனார் அசோகன் கே.பி. கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஹரிராஜ் இந்த மாத இறுதியில் அக்டோபர் 27 அன்று தனது மகனின் 10வது பிறந்தநாளைக் கொண்டாட கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. “அவர் இஷானின் பிறந்தநாளைத் தவறவிடுவதே இல்லை. எங்களுடன் இருக்க அவர் ஏற்கனவே விடுப்புக்கு விண்ணப்பித்திருந்தார்” என்று அவரது மாமனார் மனமுடைந்து தெரிவித்துள்ளார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஹரிராஜ், CUSAT (கேரளா) மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது. அவரை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்த சிறந்த நண்பரும் சக ஊழியருமான டிஜின் தாமஸ், செவ்வாய்க்கிழமை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு உடலை எடுத்துச் சென்ற தருணத்தில் உடன் பயணித்திருக்கிறார். “நாங்கள் என்ஜினியரிங் படித்த நாட்களில் இருந்தே நண்பர்களாக இருந்தோம். அவர் எனக்கு ஒரு சகோதரர் போன்றவர்,” என்று அபுதாபியில் அதே குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த டிஜின் கூறியுள்ளார்.
அவர் இறந்த இரவு, ஹரிராஜ் தனது அறைத் தோழர் சுஜித்தை விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு டிஜினின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். “அவர் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டார், கேக் வெட்டினார், பரிசுகளையும் கொண்டு வந்தார். நாங்கள் ஒன்றாக சிறிது நேரம் கழித்தோம். இது ஒன்றாக இருக்கும் கடைசி நாள் என்று எங்களால் யாராலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை,” என்று டிஜின் நினைவு கூர்ந்தார்.
இந்நிலையில் அன்று இரவு சுமார் 11:40 மணிக்கு, ஹரிராஜ் உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், சுஜித் உடனடியாக உதவிக்கு அழைத்ததைத் தொடர்ந்து, தனது காரில் ஹரிராஜின் வீட்டிற்கு விரைந்ததாகவும் கூறிய டிஜின், “ஹரிராஜ் சுவாசிப்பதில் சிரமப்படுவதாகவும், அதிகமாக வியர்த்துக்கொண்டிருந்ததாகவும்” நினைவு கூர்ந்தார்.
பின்னர், பாராமெடிக்கல் மருத்துவர்கள் சில நிமிடங்களில் வந்து CPR செய்து, அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. “அவரை உயிர்ப்பிக்க மருத்துவர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் முயன்றனர், ஆனால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஹரிராஜுக்கு நீரிழிவு இருந்தபோதிலும், உணவு மற்றும் யோகா மூலம் அதை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் ஒரு வெளிநாட்டு சுகாதார பரிசோதனையின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட தனது ECG-யில் ஏதோ ஒரு பிரச்சனையைப் பற்றி பேசியதாக டிகின் நினைவு கூர்ந்தார்.
“மேலும் சாப்பிட்ட பிறகு அவருக்கு நெஞ்செரிச்சல் இருந்தது, எனவே அது இரைப்பை பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்றும் அவர் நினைத்தார், நாங்கள் யாரும் அதை எதிர்பார்க்கவில்லை” என்று டிகின் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினரும் நண்பர்களும் ஹரிராஜை ஒரு புத்திசாலித்தனமான பொறியாளர், அன்பான கணவர், அர்ப்பணிப்புள்ள தந்தை மற்றும் மகிழ்ச்சியான நண்பர் என்று நினைவில் கொள்கிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel