அமீரகத்தில் நிலவி வரும் நிலையற்ற வானிலை நாளையும் நாட்டின் சில பகுதிகளை பாதிக்கும் என்பதால், அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (மொஹ்ரே), நாளை டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை, முடிந்தவரை தொலைதூர வேலைகளை அனுமதிக்குமாறு மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள தனியார் துறை வணிகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அத்துடன் ஒவ்வொரு எமிரேட்டிலும் இருக்கக்கூடிய உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாடு நிலையற்ற வானிலையை நாளையும் அனுபவிக்கும் என்பதால், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தி குறுஞ்செய்தி மூலம் துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து தொலைபேசிகளுக்கும் அனுப்பப்பட்ட அந்த அவசர எச்சரிக்கையில், “அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் “வெள்ளிக்கிழமை நண்பகல் வரை முற்றிலும் அவசியமானால் தவிர வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இந்த மோசமான வானிலை காரணமாக அரபு கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அணிக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மூன்றாம் இடத்திற்கான போட்டியை ரத்து செய்வதாக ஃபிஃபா அறிவித்துள்ளது. முன்னதாக, கலீஃபா சர்வதேச மைதானத்தில் பெய்த கனமழையால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்ட நிலையில் இறுதியில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel