துபாயில் நேற்று (ஜனவரி 15, வியாழக்கிழமை) முதல், டிஸ்கவரி கார்டன்ஸில் உள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு இட மேலாண்மையை மேம்படுத்தவும், சமூகத்தில் நெரிசலைக் குறைக்கவும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதன்படி பார்க்கிங் கட்டணம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி முழுவதும் அதன் கட்டண பார்க்கிங் சேவைகளைத் தொடங்குவதை முன்னிட்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் புதிதாக பார்கோனிக் (Parkonic) நிறுவியுள்ள வாகன நிறுத்துமிடப் பலகைகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அமைப்பின் கீழ், தற்போதுள்ள பார்க்கிங் இல்லாத கட்டிடங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு யூனிட்டும் ஒரு இலவச பார்க்கிங் அனுமதிக்கு தகுதியுடையது. கூடுதல் வாகனங்களுக்கு கட்டணச் சந்தா தேவைப்படும், இதற்கான மாதாந்திர உறுப்பினர் தொகை 945 திர்ஹம்ஸ் ஆகவும், காலாண்டு உறுப்பினர் தொகை 2,625 திர்ஹம்ஸ் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது மாதாந்திர கட்டணத்துடன் ஒப்பிடும்போது 210 திர்ஹம்ஸ் சேமிப்பை வழங்குகிறது என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் இலவச பார்க்கிங் அனுமதிகளை பார்கோனிக் குத்தகைக்கான பதிவு போர்டல் (tenants registration portal) மூலம் செயல்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்கோனிக் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் கட்டண பார்க்கிங் சந்தாக்களும் கிடைக்கின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பார்க்கிங் மீட்டர்கள் நாளின் நேரத்தைப் பொறுத்து மாறுபடும் கட்டணங்களுடன் செயல்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்க்கிங் செய்வதற்கு மணிக்கு 4 திர்ஹம் வசூலிக்கப்படும், மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை, பார்க்கிங் கட்டணம் மணிக்கு 6 திர்ஹம் ஆக அதிகரிக்கும். நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை பார்க்கிங் இலவசம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டிஸ்கவர் கார்டன்ஸில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், “குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் பார்க்கிங் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் இதனால் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்த வேண்டியிருக்கும், இதன் விளைவாக 500 திர்ஹம் வரை பார்க்கிங் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் கூடுதல் கார்களுக்கான பார்க்கிங் கட்டணம் எங்களுக்கு அதிக பார்க்கிங் இடங்களைப் பெற வழிவகுக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதே போல் தனியார் பார்க்கிங் இல்லாத ஒவ்வொரு குடியிருப்பு யூனிட்டிற்கும் ஒரு இலவச அனுமதி கிடைக்கும் என்று துபாய் ஹோல்டிங் சமூக மேலாண்மை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், பல வாகனங்களைக் கொண்ட குத்தகைதாரர்கள் கூடுதல் பார்க்கிங் இடங்களை வாங்க வேண்டும். அதே நேரத்தில் இந்த பார்க்கிங் சந்தாவானது தனிப்பட்ட ஓட்டுநர்களுக்கு அல்ல, பதிவுசெய்யப்பட்ட ரெசிடென்சி யூனிட்டிற்கு மட்டுமே அனுமதிகள் வழங்கப்படும் என்பதை குடியிருப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்க விண்ணப்பங்களை உடனடியாக நிரப்பவும் நிறுவனம் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை பகிரப்பட்ட பார்க்கிங்கை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், டிஸ்கவரி கார்டன்ஸ் முழுவதும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel