புனித ரமலான் மாதத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் முதல் நாடாக ஓமான் நாடானது, வரும் பிப்ரவரி 19 வியாழக்கிழமை அன்று, புனித ரமலான் மாதத்தின் முதல் நாளைக் குறிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புனித ரமலான் மாதமானது பிறை பார்ப்பதை பொருத்தே அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிப்ரவரி 17ம் தேதி மாலையில் பிறை நிலவைப் பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், பிப்ரவரி 18 புதன்கிழமை ஷாபான் மாதத்தின் இறுதி நாள் என்றும், அடுத்த நாள் ரமலான் மாதத்தின் தொடக்கமாகக் கருதப்படும் என்றும் ஹிஜ்ரி மாதங்களைப் பார்ப்பதற்கான முக்கிய குழு கூறியுள்ளது.
ஓமான் சுல்தானகத்தின் அனைத்து பகுதிகளிலும், ஷாபான் மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்தில் சந்திரன் மறையும் என்பதைக் காட்டும் வானியல் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அரபு மாதங்களின் தொடக்கத்தை உறுதிப்படுத்த பிறை பார்க்கும் குழு பயன்படுத்திய நிறுவப்பட்ட மத மற்றும் அறிவியல் அளவுகோல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.