அமீரகத்தில் நடப்பு ஆண்டிற்கான ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறையைப் பார்ப்பதற்குப் பொறுப்பான குழு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17, 2026) கூடும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபத்வா கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) அறிவித்துள்ளது.
அன்றைய நாளின் மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு குழுவின் பணிகள் தொடங்கும் என்றும் கள கண்காணிப்புக் குழுக்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை உறுப்பினர்கள் மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து வரும் கண்டுபிடிப்புகளை ஆராய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை பிறையைக் கவனித்து, அதன் அதிகாரப்பூர்வ தளங்களில் பகிரப்பட்ட பிரத்யேக மின்னணு இணைப்பு மூலம் தங்கள் சாட்சியத்தை சமர்ப்பிக்குமாறும் கவுன்சில் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குழுவின் ஆலோசனைகள் முடிந்ததும், ரமலான் பிறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று நாளை மறுநாள் பிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை மாலையான, ஷாபான் மாதம் 29 ஆம் தேதி அன்று ரமலான் பிறையைப் பார்க்குமாறு சவுதி அரேபியா முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு சவூதி அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் மற்றுமொரு வளைகுடா நாடான ஓமான் பிப்ரவரி 19 அன்று ரமலான் மதத்தின் முதல் நாள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.