ராஸ் அல் கைமாவில் வலுவான கடல் நீரோட்டங்களில் சிக்கிக் கொண்ட தனது தங்கையையும் உறவினர்களையும் காப்பாற்ற முயன்றபோது 13 வயது எமிராட்டி சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் அவரது குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை) மாலை முகமது அகமது பின் அமர் அல் ஷெஹி என்ற 13 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அவனுடைய தந்தையின் கூற்றுப்படி, குழந்தைகள் கரைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த அலைகளும் நீரோட்டங்களும் அவர்களைக் கடலுக்குள் ஆழமாக இழுக்கத் தொடங்கின. முன்னதாக, மோசமான நிலைமைகளைக் கவனித்து அங்கிருந்து விலகிச் சென்ற முகமது, தனது ஏழு வயது தங்கையையும் இரண்டு உறவினர்களையும் ஆபத்தில் இருந்து மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் சென்றதாகவும், முதலில் தங்கையைப் பாதுகாப்பாக வெளியே இழுத்து உயிரைக் காப்பாற்றியதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக அளவு கடல்நீரை விழுங்கியிருந்ததால் மயக்க நிலையில் மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், மீட்புப் பணியின் போது, முகமது கடல்நீரை விழுங்கியதால் மிகவும் சோர்வடைந்து, கரைக்குத் திரும்பும் சக்தியை இழந்ததாக அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அவசர சிகிச்சைக் குழுக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதன் பிறகு, உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது காப்பாற்றிய குழந்தைகள் அனைவரும் உயிர் பிழைத்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முகமது, எப்போதும் இளைய குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அக்கறையும் பொறுப்பும் உள்ள சிறுவன் என்று விவரித்த அவரது தந்தை, “அவர் அனைவருக்கும் ஒரு அண்ணனைப் போல இருந்தார், எப்போதும் அவர்களைக் கவனித்துக் கொள்வார்,” என்று முகமதுவை நினைவு கூர்ந்தார்.
இதற்கிடையில், அவரது தங்கை இந்த இழப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து மீளப் போராடி வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அழைப்பு
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுக்க உதவும் வகையில் கடற்கரைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு தந்தை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
கடல் நிலைமைகள் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதையும், மற்றவர்களைக் காப்பாற்றத் தன் உயிரைத் தியாகம் செய்த ஒரு சிறுவனின் துணிச்சலையும் இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel