துபாய் காவல்துறையானது, முக்கிய சாலைகள் மற்றும் இன்டர்செக்ஷன்களில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த ரேடார் அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், ஆபத்தான ஓட்டுநர் நடத்தைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அளவிலான போக்குவரத்து கண்காணிப்பு முறையை இது அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட் ரேடார்கள் அதிவேகம் மட்டுமல்லாமல், சிக்னல் மீறிச் செல்லுதல், கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டுதல், திடீரெனப் பாதை மாறுதல், முன்னால் செல்லும் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்தல் (tailgating), சீட் பெல்ட் அணியாதது, சட்டவிரோதமாக ஜன்னல் கண்ணாடிகளை கருமையாக்குதல் (tint) மற்றும் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் கண்டறியும் திறன் கொண்டவை. விதிகளை மீறுவது கண்டறியப்படும் வாகன ஓட்டிகள், பெருந்தொகை அபராதம், ‘பிளாக் பாயிண்டுகள்’ (Black points) மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்’.
இந்த AI-சார்ந்த ரேடார்கள் கண்டறியக்கூடிய முக்கிய விதிமீறல்கள் மற்றும் அதற்கான தண்டனைகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அதிவேக விதிமீறல்கள்
அமீரகத்தில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறிச் செல்லும் ஓட்டுநர்கள், அவர்கள் வரம்பை எவ்வளவு தூரம் மீறியுள்ளனர் என்பதைப் பொறுத்து பின்வரும் தண்டனைகளை எதிர்கொள்வர்:
வரம்பை விட மணிக்கு 80 கி.மீ-க்கும் அதிகமாகச் செல்லுதல்
- அபராதம்: 3,000 திர்ஹம்ஸ்
- பிளாக் பாயிண்டுகள்: 23
- வாகனம் பறிமுதல்: 60 நாட்கள்
வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ-க்கும் அதிகமாக மீறுதல்
- அபராதம்: 2,000 திர்ஹம்ஸ்
- பிளாக் பாயிண்டுகள்: 12
- வாகனம் பறிமுதல்: 30 நாட்கள்
வரம்பை விட மணிக்கு 50 கி.மீ வரை அதிகமாகச் செல்லுதல்
- அபராதம்: 1,000 திர்ஹம்ஸ்
வரம்பை விட மணிக்கு 40 கி.மீ வரை அதிகமாகச் செல்லுதல்
- அபராதம்: 700 திர்ஹம்ஸ்
வரம்பை விட மணிக்கு 30 கி.மீ வரை அதிகமாகச் செல்லுதல்
- அபராதம்: 600 திர்ஹம்ஸ்
வரம்பை விட மணிக்கு 20 கி.மீ வரை அதிகமாகச் செல்லுதல்
- அபராதம்: 300 திர்ஹம்ஸ்
சிவப்பு சிக்னலை மீறிச் செல்லுதல்
சிவப்பு சிக்னலை மீறிச் செல்லுதல் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்துச் சட்டங்களின் கீழ், மிகவும் தீவிரமான குற்றங்களில் ஒன்றாகத் தொடர்ந்து கருதப்படுகிறது.
- அபராதம்: 1,000 திர்ஹம்ஸ்
- கருப்புப் புள்ளிகள்: 12
- வாகனம் பறிமுதல்: 30 நாட்கள்
துபாயில், 2023 ஆம் ஆண்டின் ஆணை எண் 30-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க, வாகன ஓட்டிகள் 50,000 திர்ஹம்ஸ் வரை செலுத்த வேண்டியிருக்கலாம்.
பாதை விதி மீறல்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் பின்வரும் பாதுகாப்பற்ற பாதை நடத்தைகளை அடையாளம் காணும்:
- திடீரென திசைமாறுதல்
- சாலையின் ஓரத்தில் வாகனம் ஓட்டுதல்
- பாதையை மாற்றி செல்ல அனுமதிக்காததை தெரியப்படுத்த போடப்பட்டிருக்கும் திடமான கோடுகளை சட்டவிரோதமாகக் கடந்து ஓட்டுதல்
- வாகனத்தை நெருக்கமாகப் பின்தொடர்தல்
வாகன ஓட்டிகள் குறிக்கப்பட்ட பாதைகளுக்குள் இருக்கத் தவறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க, “இரண்டு வினாடி விதியைப்” பின்பற்றுமாறு அதிகாரிகள் ஓட்டுநர்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.
கவனச்சிதறலுடன் வாகனம் ஓட்டுதல்
வாகன ஓட்டிகள் வாகனத்திற்குள் இருக்கும் போதும் கை அசைவுகளைக் கண்காணித்தல் மற்றும் திரை ஒளியை அடையாளம் காணுதல் மூலம் கைபேசி பயன்பாட்டை ரேடார்களால் கண்டறிய முடியும்.
வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துவதற்கான தண்டனை:
- அபராதம்: 800 திர்ஹம்ஸ்
- கருப்புப் புள்ளிகள்: 4
- வாகனம் பறிமுதல்: 30 நாட்கள்
சீட் பெல்ட் மீறல்கள்
அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்த வெளிச்சச் சூழல்களிலும்கூட, சீட் பெல்ட் அணியாத ஓட்டுநர்களையும் பயணிகளையும் செயற்கை நுண்ணறிவு (AI) ரேடார்களால் கண்டறிய முடியும்.
- அபராதம்: 400 திர்ஹம்ஸ்
- கருப்புப் புள்ளிகள்: 4
சட்டவிரோத ஜன்னல் வண்ணப்பூச்சு
காரில் அளவுக்கு அதிகமாக வண்ணப்பூச்சு பூசப்பட்ட முன்பக்கக் கண்ணாடிகள் உட்பட, அங்கீகரிக்கப்படாத ஜன்னல் வண்ணப்பூச்சை இந்த ரேடார்களால் கண்டறிய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின் கீழ்:
- பக்கவாட்டு மற்றும் பின்புறக் கண்ணாடிகளில் 50% வரை டின்ட் இருக்கலாம்
- முன்பக்கக் கண்ணாடிகள் பெரும்பாலும் தெளிவாக இருக்க வேண்டும்
மீறலுக்கான தண்டனைகள்:
- அபராதம்: 1,500 திர்ஹம்ஸ்
- துபாயில் வாகனம் பறிமுதல் செய்யப்படலாம்
- 2023-ஆம் ஆண்டின் ஆணை எண் 30-இன் கீழ், வாகனத்தை விடுவிப்பதற்கான கட்டணம் 10,000 திர்ஹம்ஸ் வரை விதிக்கப்படலாம்
அதிக சத்தம் எழுப்பும் அல்லது மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள்
வேகத்தை அல்லது சத்தத்தின் அளவை அதிகரிக்க சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- அபராதம்: 2,000 திர்ஹம்ஸ்
- பிளாக் பாயிண்ட்ஸ்: 12
- வாகனத்தை விடுவிப்பதற்கான கட்டணம்: 10,000 திர்ஹம்ஸ் வரை வசூலிக்கப்படும்
காலாவதியான வாகனப் பதிவு
காலாவதியான பதிவுடன் வாகனம் ஓட்டுவதும் ஸ்மார்ட் அமைப்பு கண்டறியப்படலாம்.
- அபராதம்: 500 திர்ஹம்ஸ்
- கருப்புப் புள்ளிகள்: 4
- வாகனம் பறிமுதல்: 7 நாட்கள்
துபாய் முழுவதும் பாதுகாப்பை மேம்படுத்தவும் விபத்துகளைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்திய துபாய் காவல்துறை, வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்துத் தொடர்ந்து அறிந்துகொண்டிருக்கவும், பொறுப்புணர்வுடன் வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel