ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அத்துடன் மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கும், நாளை (மே 11, திங்கட்கிழமை) முதல் நேரடிக் கற்றல் மீண்டும் தொடங்கும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்விச் செயல்முறை மற்றும் கல்வி மதிப்பீடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்ததன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் இது குறித்தான ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பு நெறிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்
வகுப்புகள் சீராகத் தொடர்வதற்கு ஆதரவளிக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் காப்புறுதி நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் தற்போதைய நிலவரங்கள் மற்றும் தொடர்ச்சியான மதிப்பீடுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மாற்று கற்றல் மாதிரிகளைச் செயல்படுத்த பள்ளிகளும் மழலையர் பள்ளிகளும் தயாராக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏதேனும் அறிவிப்புகள் இருந்தால், அவை அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் விளக்கமளித்துள்ளனர்.
அதே போல ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் திங்கட்கிழமை முதல் நேரடிக் கற்றலை மீண்டும் தொடங்கும் என்று உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதிகரித்த பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக தொலைநிலைக் கற்றல் காலத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு இந்த முடிவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கல்வி மற்றும் கல்வி மதிப்பீடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைத்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொலைநிலைக் கற்றல் நடவடிக்கைகளானது
அதிகரித்த பிராந்திய பதட்டங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதோடு தொடர்புடைய அவசர எச்சரிக்கைகளுக்கு மத்தியில், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் மே 5 முதல் 8 வரை தற்காலிகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.