ADVERTISEMENT

துபாயில் வரவுள்ள 4 எதிஹாட் ரயில் நிலையங்கள்.. RTA வெளியிட்ட முக்கிய தகவல்!!

Published: 15 Sep 2026, 1:34 PM |
Updated: 15 Sep 2026, 1:46 PM |
Posted By: Menaka

துபாய் மற்றும் அபுதாபியை இணைக்கும் வரவிருக்கும் அதிவேக ரயில் சேவைக்கான இரண்டு நிலையங்கள் உட்பட, எதிஹாட் ரயிலின் நான்கு நிலையங்கள் துபாயில் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) தலைமை இயக்குநரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான மத்தார் அல் தயர் (Mattar Al Tayer) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதிகாரிகள் வெளியிட்டுள்ள விபரங்களின் படி, தேசிய எதிஹாட் ரயில் பயணிகள் நெட்வொர்க்கில் துபாயில் இரண்டு நிலையங்கள் இடம்பெறும். இவை இந்த எமிரேட்டை பரந்த ஐக்கிய அரபு அமீரக ரயில் அமைப்புடன் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவற்றில் ஒன்று அல் யலாயிஸ் நிலையம் (Al Yalayis Station) ஆகும். இது துபாயில் உள்ள எதிஹாட் ரயிலின் முக்கிய பயணிகள் நிலையமாகும், மேலும் இது செப்டம்பர் 30 அன்று திறக்கப்பட உள்ளது.

இரண்டாவது நிலையம் அமையவுள்ள இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், 2032-ஆம் ஆண்டிற்கான RTA-வின் துபாய் ரயில் நெட்வொர்க் வரைபடம், மேதான் பகுதியில் ஒரு நிலையம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT

அதிவேக ரயிலுக்கான இரண்டு துபாய் நிலையங்கள்

மேலும், துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையிலான தனிப்பட்ட அதிவேக ரயில் திட்டம், துபாயில் மேலும் இரண்டு நிலையங்களை சேர்க்கும் என கூறப்படுகின்றது.

அல் தயரின் கூற்றுப்படி, இந்த நிலையங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் ஜத்தாஃப் ஆகிய இடங்களில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்த அதிவேக சேவை தனித்த, முழுமையாக மின்மயமாக்கப்பட்ட நெட்வொர்க்கில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அபுதாபி மற்றும் துபாய் இடையிலான பயண நேரத்தை சுமார் 30 நிமிடங்களாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய வேகமான மற்றும் திறமையான இணைப்பை வழங்குவதன் மூலம், அமீரகத்தின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார மையங்களுக்கு இடையிலான பயண முறையை இத்திட்டம் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய் மெட்ரோவுடன் இணையவுள்ள எதிஹாட் ரயில்

தேசிய ரயில் திட்டங்கள் துபாயின் நகர்ப்புற போக்குவரத்து நெட்வொர்க்குடனும் ஒருங்கிணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், எதிஹாட் ரயில் சேவையானது துபாய் மெட்ரோவின் சிவப்பு (Red), பச்சை (Green) மற்றும் நீல (Blue) வழித்தடங்களுடனும், அத்துடன் முன்மொழியப்பட்ட கோல்டு லைன் உட்பட பரிசீலனையில் உள்ள எதிர்கால வழித்தடங்களுடனும் இணைக்கப்படும் என்று அல் தயர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒருங்கிணைப்பு, துபாயின் பல்வேறு பகுதிகளை அமீரகம் முழுவதும் உள்ள நகரங்களுடன் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த வலைப்பின்னலை உருவாக்கும் துபாயின் நீண்டகால போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இவ்வாறு தேசிய மற்றும் துபாய் ரயில் அமைப்புகள் ஒன்றுக்கொன்று துணையாக இருப்பதையும், தடையற்ற எதிர்கால போக்குவரத்து வலையமைப்பை ஆதரிப்பதையும் உறுதிசெய்ய RTA, எதிஹாட் ரயில் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel