ADVERTISEMENT

அமீரகத்தில் முடிவுக்கு வந்த மதியநேர வேலைத் தடை.. இன்று முதல் வழக்கமான நேரத்தில் பணிகள்!!

Published: 16 Sep 2026, 9:50 AM |
Updated: 16 Sep 2026, 9:50 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலத்தில் வெளியில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வருடாந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கோடைக்கால வெப்பத் தடுப்பு நடவடிக்கையின்போது, ​​டெலிவரி ஊழியர்களுக்காக நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக மனிதவள மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை செயல்படுத்தப்படும் ‘தொழில்சார் வெப்பத் தடுப்புக் கொள்கை’ (Occupational Heat Stress Prevention Policy), நாளின் அதிக வெப்பமான நேரங்களில் ஊழியர்களைப் பாதுகாக்க உதவியதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இக்கொள்கையின்படி, அமீரகத்தில் மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலும் திறந்தவெளிப் பகுதிகளிலும் வேலை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

UAE முழுவதும் 12,000 ஓய்வு மையங்கள்

இத்திட்டத்தின் கீழ் குறிப்பாக, டெலிவரி ஊழியர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஓய்வெடுக்கவும், வெப்பத்தைத் தணிக்கவும் பிரத்யேக இடங்களை வழங்குவதற்காக, அரசு அமைப்புகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து MoHRE இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த முயற்சியின் மூலம், நாடு முழுவதும் டெலிவரி ஊழியர்களுக்காக அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய 12,000-க்கும் மேற்பட்ட ஓய்வு மையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

ADVERTISEMENT

இது குறித்து MoHRE-இன் தொழிலாளர் பாதுகாப்புப் பிரிவு உதவித் துணைச் செயலாளர் தலால் அல் ஷெஹி (Dalal Al Shehhi) அவர்கள் பேசுகையில், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமிருந்து கிடைத்த வலுவான விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பை இந்த ஆண்டின் செயல்பாடுகள் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

முக்கியமாக, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு, நவீன கண்காணிப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றின் மூலம் பணியிடப் பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சகத்தின் படி, வேலையளிப்பவர்கள் பின்வரும் பொருத்தமான பணிச் சூழல் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டும்:

  • ஊழியர்கள் ஓய்வெடுக்க நிழலான இடங்கள்
  • குளிர்ச்சியூட்டும் உபகரணங்கள்
  • போதுமான குடிநீர் மற்றும் நீர்ச்சத்தை தக்கவைக்கும் பொருட்கள்
  • முதலுதவி உபகரணங்கள்

இருப்பினும், தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்த முடியாத சில பணிகளுக்கு இந்த மதிய நேர இடைவேளையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆபத்துகளைத் தடுப்பது, பழுதுகளைச் சரிசெய்வது அல்லது அத்தியாவசிய சமூகச் சேவைகளைப் பராமரிப்பது போன்ற பணிகளும், அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தொடரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விதிமீறல்களைப் பொதுமக்கள் புகாரளிக்கும் வசதி

இந்த நடவடிக்கையில் சமூகப் பங்கேற்பும் ஊக்குவிக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் கட்டணமில்லாத் தகவல் தொடர்பு வழிகள் மூலம் புகாரளிக்க வழிவகை செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், ஆபத்துகளைக் கண்டறிவதற்கும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், பாரம்பரியக் கண்காணிப்பு முறைகளுக்குப் பதிலாகத் தடுப்பு நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்கு மாறுவதற்கும் டிஜிட்டல் கருவிகள் மற்றும் தரவு சார்ந்த கண்காணிப்பு முறைகளை தாங்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதாக MoHRE தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான பணிச்சூழலை உருவாக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த நோக்கத்திற்கு இத்திட்டம் ஆதரவளிப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel