‘Bayut’ நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் ஷார்ஜாவின் மிகவும் தேடப்படும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வில்லா பகுதிகளில் வாடகைகள் அதிகரித்து வருவதால், அங்குள்ள வாடகைச் சந்தை தொடர்ந்து சூடுபிடித்துள்ளது.
வாடகைக்கு வீடு தேடப்படும் முதல் 15 அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும், சராசரி வாடகைக் கட்டணத்தில் ஆண்டுக்கு ஆண்டு உயர்வு பதிவாகியுள்ளது. இதே போக்கு முதல் 15 வில்லா வாடகை இடங்களிலும் காணப்பட்டது. இது ஷார்ஜா முழுவதும் நிலையான தேவையைக் குறிக்கிறது.
அந்த வகையில், அடுக்குமாடி குடியிருப்பு வாடகைக்கு ‘முவைலே கமர்ஷியல்’ (Muwaileh Commercial) பகுதி தொடர்ந்து மிகவும் தேடப்படும் இடமாகத் திகழ்கிறது. இங்கு சராசரி ஆண்டு வாடகை 2025-ல் இருந்த 37,709 திர்ஹம்சிலிருந்து 8.2 சதவீதம் அதிகரித்து 40,800 திர்ஹம்சை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘அல் மஜாஸ்’ (Al Majaz) இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இங்கு வாடகை 3.3 சதவீதம் அதிகரித்து 53,471 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து ‘அல் நஹ்தா’ (Al Nahda – Sharjah) பகுதியில் சராசரி வாடகை 2.7 சதவீதம் அதிகரித்து 46,896 திர்ஹம்ஸ் ஆக இருந்தது.
அதேபோல், ‘அல் தாவூன்’ (Al Taawun), ‘அல் கான்’ (Al Khan), ‘அல் காசிமியா’ (Al Qasimia), ‘அல் ஜதா’ (Aljada) மற்றும் ‘அல் ஜாஹியா’ (Al Zahia) ஆகியவை ஷார்ஜாவில் உள்ள பிற பிரபலமான அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளாகும். அல் தாவூன் பகுதியில் வாடகை 5.3 சதவீதம் அதிகரித்து 49,600 திர்ஹம்ஸ் ஆகவும், அல் கான் பகுதியில் 3.6 சதவீதம் அதிகரித்து 58,925 திர்ஹம்ஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. அல் ஜாஹியா பகுதியில் வாடகை 7 சதவீதம் உயர்ந்து 55,799 திர்ஹம்சை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது..
சில அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் இரட்டை இலக்க வளர்ச்சி
முக்கியமாக, பகுதிகளுக்கு இடையே வாடகை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புச் சந்தைகளில் ‘அல் மம்சார்’ (Al Mamzar) மற்றும் ‘அல் நப்பா’ (Al Nabba) ஆகிய பகுதிகள் அதிகபட்ச வளர்ச்சியைக் பதிவு செய்துள்ளன. இங்கு வாடகை 12.5 சதவீதம் அதிகரித்தது. இருப்பினும், இவற்றின் சராசரி ஆண்டு வாடகைக் கட்டணங்களில் முறையே 68,198 திர்ஹம்ஸ் மற்றும் 26,535 திர்ஹம்ஸ் என்ற பெரும் வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அல் மஹதா பகுதியிலும் வலுவான வளர்ச்சி காணப்பட்டது. அங்கு வாடகை 12.4 சதவீதம் அதிகரித்து 35,948 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்தது.
இவ்வாறு ஒரே மாதிரியான வளர்ச்சி விகிதங்கள் வெவ்வேறு விலை நிலைகளை உருவாக்குவதால், ஷார்ஜாவில் வாடகைதாரர்களுக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான வாடகைத் தேர்வுகள் மற்றும் விலை நிலவரங்களை இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கடுமையாக உயரும் வில்லா வாடகைகள்
திலால் சிட்டி, வில்லா வாடகைக்கு அதிகம் தேடப்படும் இடமாகத் தொடர்கிறது. இங்கு சராசரி ஆண்டு வாடகை 225,515 திர்ஹம்ஸ் ஆக உள்ளது, இது கடந்த ஆண்டை விட 13.2 சதவீதம் அதிகமாகும்.
இதைத் தொடர்ந்து, ஹோஷி 159,935 திர்ஹம்ஸ் சராசரி வாடகையுடன் இரண்டாம் இடத்திலும், அல் ரஹ்மானியா 142,983 திர்ஹம்ஸ் வாடகையுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மற்ற பிரபலமான வில்லா குடியிருப்புகளில் அல் காதிசியா, அல் ஜஸ்ஸாத், அல் காஃபியா, அல் சப்கா, பராஷி, அல் அஸ்ரா மற்றும் அல் சுயோ ஆகியவை அடங்கும்.
குறிப்பிடப்பட்ட வில்லா குடியிருப்புகளில் அல் மன்சூரா மிகப்பெரிய வாடகை உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு சராசரி வாடகை 30.6 சதவீதம் உயர்ந்து 114,284 திர்ஹம்ஸ் ஆக அதிகரித்துள்ளது.
அல் காதிசியா 19.1 சதவீதம் உயர்ந்து 69,521 திர்ஹம்ஸ் ஆகவும், அல் சப்கா 14.5 சதவீதம் உயர்ந்து 81,423 திர்ஹம்ஸ் ஆகவும் உள்ளன. மேலும், அல் நோஃப் மற்றும் அல் நெக்ஹைலாத் ஆகிய இரண்டிலும் வாடகை 14.2 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கூறபபடுகிறது.
ஷார்ஜா சொத்துச் சந்தையில் 29.5 பில்லியன் திர்ஹாம் பரிவர்த்தனைகள்
ஷார்ஜாவின் பரந்த ரியல் எஸ்டேட் சந்தையில் தொடர்ச்சியான செயல்பாடுகளுடன் இந்த வாடகை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
ஷார்ஜா ரியல் எஸ்டேட் பதிவுத் துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 29.5 பில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகக் காட்டுகின்றன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 9.3 சதவீதம் அதிகமாகும். பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 23.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் 2026 இல் ஷார்ஜாவின் வாடகை விகிதம் ஒரு சதுர அடிக்கு 41.4 திர்ஹாம் ஆக இருந்தது. இது முந்தைய 12 மாதங்களை விட 1.8 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது.
இருப்பினும், குடியிருப்புப் பகுதி, சொத்தின் வகை மற்றும் படுக்கையறைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து வாடகைக் கட்டணங்கள் கணிசமாக வேறுபடுகின்றன. குத்தகைதாரர்களுக்கு, சமீபத்திய புள்ளிவிவரங்கள் தனித்தனி சுற்றுப்புறங்களை ஒப்பிடுவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஏனெனில், ஒரே பட்ஜெட்டில் ஷார்ஜா முழுவதும் மிகவும் மாறுபட்ட வீட்டு வசதிகள் கிடைக்கக்கூடும் என்பதை சமீபத்திய தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel