உலகளவில் விமான எரிபொருள் (ATF) விலை அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, இந்திய விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் (IndiGo) தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை அக்டோபர் 6 முதல் உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது
இதன்படி உள்நாட்டு வழித்தடங்களில், பயண தூரத்தைப் பொறுத்து எரிபொருள் கூடுதல் கட்டணம் (fuel surcharge) முன்பு இருந்த 275 ரூபாய் – 950 ரூபாய் என்ற அளவிலிருந்து 375 ரூபாய் -1,300 ரூபாய் ஆக உயரும்.
அதேபோல், சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை, இந்தக் கட்டணம் முன்பு இருந்த 900 ரூபாய் – 10,000 ரூபாய் என்ற அளவிலிருந்து 1,000 ரூபாய் -10,000 ரூபாய் ஆக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இண்டிகோ நிறுவனம் கடைசியாக ஏப்ரல் மாதத்தில் தனது எரிபொருள் கட்டணங்களை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான சூழலால் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், அக்டோபர் மாதத்தில் உலகளாவிய ஜெட் எரிபொருள் விலை மாதத்திற்கு மாதம் அதிகரித்து தற்போது 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகளில் ஜெட் எரிபொருள் 40 சதவீதம் வரை பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விலையில் ஏற்படும் கடுமையான உயர்வு நிறுவனத்தின் லாபத்தன்மைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக இண்டிகோ நிறுவனம் தனது முதல் காலாண்டில் 382 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாக அறிவித்தது. ஆகவே, தனது லாப வரம்புகளைப் (margins) பாதுகாத்துக்கொள்ள ‘எரிபொருள் ஹெட்ஜிங்’ (fuel hedging) முறையைப் பரிசீலித்து வருவதாக அந்த நிறுவனம் மே மாதத்திலேயே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்பொழுது இந்நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது.
இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel