துபாயின் அல் யலாயிஸ் 1 பகுதியில் சைக்கிளும் வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாதசாரி கடக்கும் பகுதியில் இந்த விபத்து நிகந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான சூழ்நிலைகளைக் கண்டறிய போக்குவரத்து விபத்து நிபுணர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு வந்தனர் என்றும் அதே நேரத்தில், அவசரகால மீட்புப் படையினர் விரைவாக வந்து சேர்வதை உறுதி செய்வதற்காக, ரோந்துப் படையினர் அப்பகுதியைப் பாதுகாத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல்துறையின்படி, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் ஓட்டுநர் வழிவிடத் தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல் சமீபத்தில் துபாய் காவல்துறை பகிர்ந்து வீடியோவில் வேகமாக ரெட் சிக்னலின் போது சென்று கொண்டிருந்த கார் பாதசாரி கடக்கும் பகுதியில் ஸ்ட்ரோலரில் சாலையில் கடந்து கொண்டிருந்த குழந்தை மீது மோதவிருந்து கண நேரத்தில் உயிர் தப்பிய நிகழ்வும் நடந்துள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு துபாய் காவல்துறை எச்சரிக்கை
அல் யலாயிஸ் 1-ல் உள்ள மிரா கம்யூனிட்டி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் குறைத்து, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற தனது எச்சரிக்கையை துபாய் காவல்துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்த ஒரு அறிக்கையில், நியமிக்கப்பட்ட பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஓட்டுநர்கள் எப்போதும் பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், இதுவே கடுமையான சாலை விபத்துகளுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜுமா பின் சுவைதான், பாதசாரிகளின் பாதுகாப்பு தங்களது பிரிவின் முக்கிய முன்னுரிமையாகத் தொடர்கிறது என்று கூறியுள்ளார். குறிப்பாக குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலை மண்டலங்கள் மற்றும் அதிக பாதசாரிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில் “பார்வை திறன் குறைவாக இருக்கக்கூடிய அல்லது பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில், ஓட்டுநர்கள் பாதசாரிகள் கடக்கும் இடங்களைக் கூர்ந்து கவனித்து, முன்கூட்டியே வேகத்தைக் குறைக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குறிக்கப்பட்ட இத்தகைய இடங்களில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறும் வாகன ஓட்டிகளுக்கு, கூட்டாட்சிப் போக்குவரத்துச் சட்டத்தின் 69-வது பிரிவின் கீழ் 500 திர்ஹாம் அபராதமும் ஆறு கருப்புப் புள்ளிகளும் விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுப்பதற்குப் பொறுப்பான வாகனம் ஓட்டுதல் அவசியம் என்பதை வலியுறுத்தி, வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும், வேக வரம்புகளைக் கடைப்பிடிக்கவும், எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்கவும் அனைத்துச் சாலைப் பயனாளர்களையும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.