அபுதாபியின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக, பராக்கா அணுமின் நிலையத்திற்கு வெளியே தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அபுதாபி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அமீரகத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
அபுதாபிக்கு உட்பட்ட, அல் தஃப்ரா பகுதியில் அமைந்துள்ள பராக்கா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, ஆலையின் உட்புறச் சுற்றுச்சுவருக்கு வெளியே உள்ள ஒரு மின்சார ஜெனரேட்டரில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு அளவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது அவை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தத் தீ விபத்து ஆலையின் பாதுகாப்பையோ அல்லது அதன் முக்கிய அமைப்புகளின் தயார்நிலையையோ பாதிக்கவில்லை என்றும், அனைத்து நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்றும் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான கூட்டாட்சி ஆணையம் உறுதிப்படுத்தியது.
மேலும், இது தொடர்பான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் அந்த ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.