ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக, எமிரேட்களுக்கு இடையிலான பயணிகள் ரயில் பயணங்களை அமீரக மக்களும் பார்வையாளர்களும் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30, 2026 அன்று தனது சேவையைத் தொடங்கவுள்ள அபுதாபி–ஃபுஜைரா பயணிகள் ரயிலுக்கான முன்பதிவை எத்திஹாட் ரயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தத் தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக, பயணக் கட்டணத்தில் 50 சதவீத அறிமுகச் சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த புதிய சேவையானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பயணிகள் ரயில் கட்டமைப்பின் முதல் கட்டமாகும். இத்திட்டம் எதிர்காலத்தில் பல அமீரகங்களை இணைப்பதோடு, சாலைப் பயணத்திற்கு மாற்றாக வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எத்திஹாட் ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பயணிகள் இப்போது எத்திஹாட் ரயில் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அறிமுகக் கட்டணமாக, ‘கம்போர்ட் கிளாஸ்’ (Comfort Class) பயணத்திற்கு 109 திர்ஹமிற்குப் பதிலாக 55 திர்ஹமும், ‘பிரீமியம் கிளாஸ்’ (Premium Class) பயணத்திற்கு 239 திர்ஹமிற்குப் பதிலாக 120 திர்ஹமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அபுதாபி மற்றும் ஃபுஜைரா இடையிலான பயண நேரம் வெறும் 1 மணிநேரம் 45 நிமிடங்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது இவ்விரு அமீரகங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கிறது.
ஆரம்பத்தில், இரு திசைகளிலும் தினமும் மூன்று நேரடிச் சேவைகள் இயக்கப்படும். அபுதாபியிலிருந்து காலை 8:19, மதியம் 1:53 மற்றும் மாலை 6:39 ஆகிய நேரங்களிலும், ஃபுஜைராவிலிருந்து காலை 5:34, காலை 10:59 மற்றும் மாலை 5:28 ஆகிய நேரங்களிலும் ரயில்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயில் கட்டமைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்பதையும் அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பயணிகள் ரயில் கட்டமைப்பின் அதிகாரப்பூர்வத் தொடக்கத்துடன் இணைந்து, துபாய் மற்றும் அல் தைத் (Al Dhaid) நிலையங்கள் செப்டம்பர் 30, 2026 அன்று திறக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து அல் தஃப்ரா (Al Dhafra) நிலையங்கள் டிசம்பர் 30 அன்றும், ஷார்ஜா நிலையம் மார்ச் 30, 2027-ன்றும் திறக்கப்பட்டு, ரயில் பாதை முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபி நிலையம் முகமது பின் சையத் சிட்டியிலும் (Mohammed Bin Zayed City), ஃபுஜைரா நிலையம் அல் ஹிலால் சிட்டியிலும் (Al Hilal City) அமைந்துள்ளன. இரு நிலையங்களும் தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையங்களில் பார்க்கிங் இடங்கள், காத்திருப்பு அறைகள், பிரார்த்தனை அறைகள், விற்பனை நிலையங்கள், உணவு மற்றும் பான வசதிகள், முதலுதவி சேவைகள், குடும்பங்களுக்கான காத்திருப்புப் பகுதிகள், டாக்ஸி நிலையங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளைப் பயணிகள் எதிர்பார்க்கலாம்.
மேலும், இந்த நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் (escalators), மின்தூக்கிகள் (elevators), சிறு கடைகள், மருத்துவ மற்றும் காவல் உதவி வசதிகள் மற்றும் நடைமேடைகளை எளிதாக அணுகும் வசதிகளும் உள்ளன.
அத்துடன் ரயில் பயணத்தின்போது, உறுதிசெய்யப்பட்ட இருக்கை வசதி, வை-ஃபை (Wi-Fi) இணைப்பு மற்றும் வசதியான பயண அனுபவம் ஆகியவற்றை பயணிகள் பெறலாம். எமிரேட்டுகளுக்கு இடையிலான பயணங்களை எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக எத்திஹாட் நிறுவனம் கூறியுள்ளது.
எதிஹாட் ரெயிலின் (Etihad Rail) பயணிகள் ரயில் தொகுப்பில் 13 ரயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 400 பயணிகள் வரை பயணிக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் நிலையான போக்குவரத்து ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், முழுமையாக இணைக்கப்பட்ட ஒரு தேசிய போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது.
கூடுதல் எமிரேட்டுகளை இணைப்பதற்கும், நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, எதிர்கால விரிவாக்கத் திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel