ADVERTISEMENT

சவூதி: விமான நிலையம் அருகே ஏற்பட்ட தீ.. விமான சேவையில் பெரும் இடையூறுகளை சந்திக்கும் ரியாத் ஏர்போர்ட்.. என்ன நடந்தது..??

Published: 19 Sep 2026, 8:04 PM |
Updated: 19 Sep 2026, 8:06 PM |
Posted By: admin

ஏமனில் மோதல் தொடங்கி பல ஆண்டுகள் ஆன நிலையில், சவுதி அரேபியா மற்றும் ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி இயக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்து வருகிறது. 2014-ல் ஹூதிகள் ஏமன் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர், அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே சவுதி தலைமையிலான இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2022-ல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் சண்டை பெருமளவு தணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஹூதிகள் சவுதி அரேபியாவை நோக்கித் தாக்குதல்களை நடத்துவதும், ரியாத் ஏமனில் தாக்குதல்களை மேற்கொள்வதுமாக நிலைமை மாறியுள்ளது.

ADVERTISEMENT

இந்த தீவிரமடைந்த மோதலின் காரணமாக ஒரு சில தினங்களுக்கு முன் சவூதியை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலை இடைமறிக்கும் சம்பவத்தின் போது உடைந்த பாகங்கள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

நிலைமை இவ்வாறு இருக்க இன்று (சனிக்கிழமை), சவூதி தலைநகரின் ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியிலிருந்து கருப்புப் புகையும் தீப்பிழம்புகளும் வெளிப்படுவதை அந்நகரின் குடியிருப்பாளர்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், நகரில் உள்ள மற்றவர்கள் வெடிச்சத்தங்களைக் கேட்டதாகத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இது குறித்து ஒருவர் கூறுகையில் “விமான நிலையத்தின் திசையில் நாங்கள் கருப்புப் புகையையும் தீயையும் கண்டோம்” என்று தெரிவித்துள்ளார். ரியாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அராம்கோ எரிபொருள் தொட்டி (Aramco fuel tank) ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக AFP பத்திரிகையாளர் ஒருவர் பின்னர் தெரிவித்தார். இருப்பினும் இந்த சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் சவூதி தலைநகரான ரியாத்தில் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையை தொடர்ந்து நிலவும் சூழ்நிலை காரணமாக கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் ரத்து செய்யப்படுதல் மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் இருப்பதாக விமானங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான FlightRadar24 தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அந்த விமான நிலையம், தளத்தின் அதிகபட்ச இடையூறு குறியீடான 5.0-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, “நீண்ட தாமதங்கள் மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுதல் போன்ற பெரும் சிக்கல்களை” விமான நிலையம் சந்தித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் அண்டை நாடான ஏமனில் சண்டை தீவிரமடைந்த பிறகு, சவூதி அதிகாரிகள் விடுத்த வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.