ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள (NCM) தகவலின்படி, அக்டோபர் 5, திங்களன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை பெரும்பாலும் தெளிவாகவோ அல்லது ஓரளவு மேகமூட்டத்துடனோ காணப்படும். மேலும், பிற்பகலில் கிழக்குப்பகுதிகளில் மேகங்கள் உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், இன்று இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை வேளைகளில் சில கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பனிமூட்டம் அல்லது மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தென்மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளிலிருந்து மணிக்கு 10 முதல் 20 கி.மீ வேகத்தில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 36°C, 37°C மற்றும் 36°C ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், குறைந்தபட்ச வெப்பநிலை துபாயில் 31°C ஆகவும், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் 29°C ஆகவும் இருக்கும்.
ஈரப்பதத்தைப் பொறுத்தவரை, துபாயில் 50 முதல் 90 சதவீதம் வரையிலும், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் 45 முதல் 90 சதவீதம் வரையிலும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் கடல் நிலை அவ்வப்போது லேசானது முதல் மிதமான சீற்றமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel