ADVERTISEMENT

இந்தியாவை தொடர்ந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த அமீரக அரசு.. உள்ளூர் சந்தையில் போதிய இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை..!!

Published: 29 Jul 2023, 8:15 AM |
Updated: 29 Jul 2023, 8:34 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 28) அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் அமைச்சர்கள் தீர்மானம் எண். 120 இன் படி, உள்ளூர் சந்தையில் போதுமான அரிசி விநியோகத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த தடையானது நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும், கடந்த ஜூலை 20, 2023க்குப் பிறகு இந்தியாவில் இருந்து நாட்டின் இலவச மண்டலங்கள் (Free Zones) உட்பட அமீரகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதிக்கு பொருந்தும் என்றும் பொருளாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இது ஒருங்கிணைந்த சுங்கக் கட்டணத்தின் (1006) கீழ் வரும் உமி அரிசி (பழுப்பு அரிசி), முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரைக்கப்பட்ட அரிசி (அது மென்மையாக்கப்பட்டாலும் அல்லது பாலிஷ் செய்யப்பட்டாலும் சரி) மற்றும் உடைந்த அரிசி என அனைத்து அரிசி வகைகளுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ பெறப்படும் அரிசியை ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் அதறகான உரிய அனுமதியை பெற அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஏற்றுமதி தொடர்பான தரவைச் சரிபார்க்க உதவும் அனைத்து ஆவணங்களும் குறிப்பாக அரிசி விளைந்த நாடு உட்பட அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான இந்த அனுமதி, அது வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், நடைமுறைகளை முடிக்க சுங்க அதிகாரிகளிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உருதிப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கான கோரிக்கைகள் மின்னணு முறையில் e.economy@antidumping மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் நேரடியாக பொருளாதார அமைச்சகத்தின் தலைமையகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.