அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா!! பாதிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள்..!!
இந்தியாவில் அரிசியின் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிற நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசானது கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியாவில் பாஸ்மதி அரிசியைத் தவிர மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய உணவுச் சந்தைகளில் பணவீக்கம் பற்றிய அச்சம் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத அரிசியை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்கின்றன.
இது சம்பந்தமாக வெளியான சில அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படி, இந்திய அரசாங்கம் தானியங்களின் ஏற்றுமதியை உடனடியாக நிறுத்தியிருக்கிறது. இந்தியாவில் பெய்த கடுமையான பருவமழையானது பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதால், ஒரே மாதத்தில் அரிசியின் சில்லறை விற்பனை மூன்று சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தியா உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பங்கு வகிக்கிறது. சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அரிசி ஒரு பிரதான உணவாகும். ஏற்கனவே, உலகளவில் உணவு பொருட்களின் விலைகள் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகின்ற நிலையில் தற்பொழுது அரிசி விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யாவின் படையெடுப்பால் கோதுமை சந்தையில் பாதிப்பை உக்ரைன் ஏற்படுத்தியதை விட அதிக வேகத்தில் உலக அரிசி சந்தையை இந்தியா சீர்குலைக்கும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் P.V.கிருஷ்ணாராவ் என்பவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.