துபாயின் எமிரேட்ஸ் குழுமமானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி 2025-26 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,700க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் மற்றும் தரைவழி கையாளுதல் சேவை நிறுவனமான dnata விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்தியில் இந்த பணியமர்த்தல் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்பொழுது, எமிரேட்ஸ் குழும ஊழியர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்து 124,927 ஆக உயர்ந்துள்ளது, இது மார்ச் 31, 2025 இறுதியில் 121,223 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது எண்ணிக்கையில் 3,704 அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் “எமிரேட்ஸ் மற்றும் dnata இரண்டும் தங்கள் எதிர்காலத் தேவைகளை ஆதரிப்பதற்காக தொடர்ந்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன,” என்று குழுமம் அதன் 2025-26 நிதியாண்டு முடிவுகளில் தெரிவித்துள்ளது.
அத்துடன், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தவும், புதிய தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவரவும், புதுமை மற்றும் தொழில்நுட்பம் மூலம் எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும், எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியை உறுதி செய்யும் எங்கள் ஊழியர்களைக் கவனிக்கவும் எமிரேட்ஸ் மற்றும் dnata பில்லியன்களை முதலீடு செய்துள்ளன என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறினார்.
எமிரேட்ஸ் குழுமம், 2025–26 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 12.2 பில்லியன் திர்ஹம் வரிக்கு முந்தைய லாபத்தை ஈட்டி, அதன் வலுவான அரையாண்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17% அதிகமாகும். இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக சாதனையான அரையாண்டு லாபத்தை பதிவு செய்கிறது. வலுவான உலகளாவிய பயண தேவை மற்றும் எமிரேட்ஸின் பிரீமியம் தயாரிப்புகளுக்கான நிலையான வாடிக்கையாளர் விருப்பம் போன்றவை இந்த சாதனை லாபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அத்துடன் துபாயைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்த விமான நிறுவனம் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் 27.8 மில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்றது, இது ஆண்டுக்கு ஆண்டு 4% அதிகரிப்பாகும், மேலும், சரக்கு அளவுகள் 4% அதிகரித்து 1.25 மில்லியன் டன்கள் ஆக உயர்ந்துள்ளது.
இது போன்று கடந்த சில ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை அதிவேகமாக வளர்ந்து வருவதால், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் dnata ஆகியவை தீவிரமாக விரிவடைந்து வருகின்றன. இதனால் தொடர்ந்து ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. எனவே எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் சேர ஆர்வமுள்ள நபர்கள் அதன் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel